புதுக்கோட்டையில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி!

Published On:

| By admin

சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டை வந்த நபர் ஒருவர் குரங்கம்மை அறிகுறியுடன் புதுக்கோட்டை அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவை தொடர்ந்து குரங்கம்மை தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 78 நாடுகள் குரங்கம்மை தொற்றால் பாதிப்படைந்துள்ளன.  மேலும் உலகம் முழுவதும் 21,148 குரங்கம்மை நோயாளிகள் உள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்திற்கு அண்டை மாநிலமான கேரளாவில் இந்நோயால் 3 பேரும், டெல்லியில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கன்னியாகுமரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்தார்.

மேலும் தமிழகத்துக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபர் ஒருவருக்கு குரங்கம்மை தொற்றின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புதுகோட்டை மாவட்டம் அரிமளத்தை சேர்ந்த 35 வயது உள்ள அந்நபருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு குரங்கம்மை தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அந்த நபர் திருச்சி மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டதால், திருச்சி சுகாதார அதிகாரிகள் புதுக்கோட்டை சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். புதுக்கோட்டையை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த நபரின் முகவரியை வைத்து அவரது வீட்டிற்குச் சென்று அவரை அழைத்து வந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனையின் முடிவுகள் வந்த பிறகு தான் அவருக்கு குரங்கம்மை நோய் இருக்கிறதா என்பது தெரிய வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel