புதுக்கோட்டையில் திருமணம் முடிந்த கையோடு, புதுமாப்பிள்ளை உடல் உறுப்பு தானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த துரை மகன் ராஜேஷுக்கும், கொத்தமங்கலம் அணவயல் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகள் டிப்ளமோ நர்சிங் படித்திருக்கும் உமா மகேஸ்வரிக்கும் நேற்று (அக்டோபர் 28 ) சேந்தன்குடி மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், மணமகள் கழுத்தில் தாலி கட்டியவுடன் மணமகன் ராஜேஷ் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார்.
திமுக உறுப்பினராக இருக்கும் ராஜேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் உள்ள ரத்த தான கழகத்தில் இணைந்து 15 க்கும் அதிகமான முறை ரத்த தானமும் செய்துள்ளார்.
இதுதொடர்பாக, மணமகன் கூறுகையில், “எனது உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து எனது மனைவியிடம் முன்பே சொல்லிவிட்டேன். செவிலியர் என்பதால் உயிர் பிழைக்க உடல் உறுப்புகள் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்திருந்தததால் ஒத்துக்கொண்டார்.

அதன் பிறகே முதலில் கண் தானம் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளேன். விபத்துகளில் பலர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறப்பதைக் காண்கிறோம்.
அது போல நடக்கக் கூடாது. எல்லோரும் உயிருடன் இருக்கும் வரை ரத்த தானம், இறக்கும் நிலையில் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் இவ்வாறு செய்வதனால் நம் தலைமுறை நன்றாக இருக்கும்” என்றார்.
மேலும் திருமணவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தென்னை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
விழாவிற்கு வந்திருந்த அனைவரும் மணமகனின் செயலை கண்டு மனதார வாழ்த்தினர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மீனவர்களைச் சிறை பிடித்த இலங்கை கடற்படை: ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்!