மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் சவால் நிறைந்த வழக்கு, அதை சிபிசிஐடி போலீசார் சிறப்பாக புலனாய்வு செய்வார்கள் என்று திருச்சி டிஐஜி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மர்மநபர்கள் மனிதக்கழிவை கலந்தனர்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
சிபிசிஐடி போலீசார் இறையூர் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று அனைத்து தரப்பு மக்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் வெள்ளனூரில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் சுந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, இறையூர் வேங்கைவயல் வழக்கைப் பொருத்தவரையில் எல்லா விதமான விசாரணையும் செய்துள்ளோம். காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொண்டோம். இதனை தோல்வி என்று பார்க்க முடியாது.
இன்னும் கூடுதல் நுட்பமாக, கூடுதல் முக்கியத்துவத்தோடு விசாரிக்க வேண்டும் என்பதற்காக சிபிசிஐடியிடம் இந்த வழக்கை அரசு வழங்கியுள்ளது.
சிபிசிஐடியும் எங்களது துறையில் உள்ள ஏஜென்சி தான். எங்களிடம் உள்ள போலீசார்தான் அங்கேயும் இருப்பார்கள்.
காலதாமதம் இன்றி குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் காவல்துறையினருக்கு எந்தவிதமான புற அழுத்தமும் இல்லை.
இந்த வழக்கில் இன்னும் கூடுதலாக விசாரிக்க வேண்டி உள்ளது. அதனை சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள். இது கண்டிப்பாக சவால் நிறைந்த வழக்கு தான்.
நுட்பமாகவும், அறிவியல் பூர்வமாகவும் சாட்சிகளின் அடிப்படையில் தான் காவல்துறையினரும் சரி, சிபிசிஐடி போலீசாரும் சரி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தமிழக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு கூட அவர்கள் விசாரணை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
கலை.ரா
“பயப்படாதீர்கள்… விமானம் ஓட்டுபவனே நான்தான்” – செயற்குழுவில் அண்ணாமலை அதிரடி!
“எமர்ஜென்சி கதவு விவகாரம்”: வீடியோ வெளியிட்டு விமர்சித்த தயாநிதி மாறன்