குறுந்தகவலை நம்பி வேலைக்காக ரூ.5 லட்சத்தை இழந்த இளைஞரின் விபரீத முடிவு!

Published On:

| By Raj

Puducherry youth commits suicide

இன்றைய உலகில், லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், வேலையில்லாதவர்களுக்கு விரைவாக வேலை கிடைக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகமாக உள்ளது. இந்தப் பலவீனத்தின் அடிப்படையிலேயே சில மோசடிகளும் செயல்படுகின்றன. இன்றைய வேலை மோசடிகளில் மிகவும் மோசமான வகைகளில் ஒன்று, அதிகாரபூர்வமாகத் தோன்றும் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவது ஆகும்.

சமீப காலமாக, மக்களிடமிருந்து பணம் பறிக்க இந்த முறையைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வேலை இருப்பதாக இணையத்தில் வந்த குறுந்தகவல் அடிப்படையில் மர்ம நபர்களிடம் ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த புதுச்சேரி பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி லாசுப்பேட்டை கருவடிக்குப்பம் இடையஞ்சாவடியைச் சேர்ந்த காளிமுத்து மகன் சபரிவாசன் (25). தொழில்நுட்பப் பட்டதாரி. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில், சில நாட்களாக வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், அவரது கைபேசியில் வந்த குறுந்தகவலில் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. Puducherry youth commits suicide

அதை நம்பிய சபரிவாசன், குறிப்பிட்ட செயலியில் தனது விவரங்களைப் பூர்த்தி செய்தததுடன், கடன் வாங்கி ரூ.5 லட்சத்தை செயலாக்கக் கட்டணமாகச் செலுத்தியுள்ளார். ஆனால், பணம் செலுத்திய நிலையில், அவருக்கான வேலை விஷயமாக எந்தத் தகவலும் வரவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சபரிவாசன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த நிலையில், கடன் கொடுத்தவர்களும் அதைக் கேட்டு நெருக்கடி தந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த லாசுப்பேட்டை போலீஸார் சபரிவாசன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share