அண்ணா பல்கலையைத் தொடர்ந்து புதுச்சேரி டெக்னாலஜிக்கல் பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை?

Published On:

| By Selvam

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் ஓய்வதற்குள், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த திமுக ஆதரவாளர் ஞானசேகரனை கைது செய்து அவர் மீது கூடுதலாக குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது .

பாதிக்கப்பட்ட மாணவி பாலியல் வன்கொடுமை நடந்தபோது, சார் என்று ஒரு நபரை ஞானசேகரன் அழைத்ததாக புகாரளித்தார்.

இதனால் யார் அந்த சார்? என்று அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தநிலையில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம், புதுச்சேரியில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.

புதுச்சேரி காலாப்பட்டு ஈசிஆர் சாலையில் புதுச்சேரி தொழில்நுட்ப கல்லூரி இயங்கி வருகிறது.

கல்லூரி வளாகத்தில் ஜனவரி 11-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த முதலாமாண்டு படிக்கும் மாணவிக்கு வெளி நபர்கள் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதைப்பற்றி நாம் புதுச்சேரி  தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் விசாரித்தோம்.

“இந்த பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி அருகிலுள்ள தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

பல்கலைக்கழக வேந்தராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனும், துணை வேந்தராக மோகனும் இருக்கின்றனர்.

பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சில ரெளடிகள், அவ்வப்போது காலேஜுக்குள் வருவதும், மாணவியரிடம் சில்மிஷம் செய்வதும், மாணவர்களிடம் வம்பு இழுப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. இதனால் மாணவர்களும் நமக்கு ஏன் பிரச்சனை என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள்.

இந்தநிலையில் தான் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் முதலாமாண்டு மாணவி பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆண் நண்பரோடு பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு பைக்கில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்த நான்கு இளைஞர்கள் அந்த பெண் அருகில் சென்றுள்ளனர். அப்போது அந்த மாணவியின் நண்பர், நான்கு பேரையும் பார்த்து முறைத்துள்ளார்.

இதனால் கோபமான இளைஞர்கள் ’என்னடா முறைக்கிற’ என்று அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். தொடர்ந்து அந்த மாணவியை பாலியல் சீண்டல் செய்துள்ளனர்.

அப்போது அந்த பெண் கூச்சலிட்டதால், சக மாணவர்கள் கூடியதும், அந்த நான்கு இளைஞர்களும் பைக்கை ஸ்டார்ட் செய்து அங்கு கூடியிருந்த மாணவர்களை மிரட்டுவது போல் ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடி வேக வேகமாக தப்பித்துள்ளனர்.

அப்போதே இந்த சம்பவத்தைப் பற்றி துணை வேந்தர் மோகனிடம் மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால், துணைவேந்தர் இதை பெரிதாக கண்டுக்கொள்ளாமல் அமைதியாக படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று மாணவர்களை அனுப்பி வைத்துவிட்டார்” என்கிறார்கள்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி ஒருவரிடம் அன்று நடந்த சம்பவத்தைப் பற்றி கேட்டோம்…

“இந்த பல்கலைக்கழகத்தில் கட்டுப்பாடும் இல்லை, பாதுகாப்பும் இல்லை. யார் வேண்டுமானும் எப்போது வேண்டுமானாலும் வந்துவிட்டு செல்வார்கள். அதேபோல, கல்லூரி விடுதியில் படிக்கும் மாணவிகளும் இரவில் எந்த நேரத்திலும் வெளியில் சென்றுவிட்டு வருவார்கள். அதை செக்யூரிட்டிகள் கண்டுகொள்ள மாட்டார்கள்.

அன்று 11-ஆம் தேதி மாலை நடந்த சம்பவத்தால் நாங்கள் பெரும் பதட்டத்திற்குள்ளானோம். காரணம், அந்த நான்கு பேரும் மாணவியை முறைத்து பார்த்தனர். என்ன முறைத்து பார்க்குறீங்க என மாணவி கேட்டபோது. அவர்கள் அருகில் நெருங்கினார்கள். அப்போது அந்த மாணவி வீடியோ எடுத்தார். பதிலுக்கு வெளியில் இருந்து வந்த நான்கு பேரில் ஒருவன் அவனது செல்போனில் மாணவியையும் மாணவரையும் க்ளோசப்பாக வீடியோ எடுத்தான். இதனால் அவர்களுக்கிடையே சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது” என்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“ஜனவரி 11 அன்று மாலை 5 மணியளவில், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட நான்கு உள்ளூர் இளைஞர்கள் தலா இரண்டு பைக்குகளில் எங்கள் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் திட்டி, வாய் தகராறில் ஈடுபட்டதால், வளாகத்தில் பரபரப்பு மற்றும் தொந்தரவு ஏற்பட்டது.

இது தொடர்பாக முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டபோது, அவர்கள் பல்கலைக்கழக கூடத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் ஒருவரின் உறவினர் எனத் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் அமைதியான கல்விச் சூழலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில், மாணவர் சமூகம் மற்றும் பணியாளர்கள் மத்தியில் கணிசமான மன உளைச்சலை இந்த மோசமான செயல் ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, உரிய சட்ட விதிகளின் கீழ், அத்துமீறுபவர்களுக்கு எதிராக முழுமையான விசாரணை மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினரிடம் கோரப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்பற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ” பாதிக்கப்பட்ட மாணவனிடம் போலீசார் விசாரித்தபோது, ‘பகல் நேரத்தில் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான்கு பேர் வந்து ஒருமாதிரி பார்த்தார்கள். என்னை முறைக்கிறீங்க என்று திட்டினார்கள். உடனே ஸ்டூடண்ட்ஸ் வந்துவிட்டார்கள். அவர்கள் எங்களை தாக்கவில்லை. அதனால் நாங்கள் புகார் கொடுக்கவில்லை’ என்று மறுத்துவிட்டார்.

புதுச்சேரி முதுநிலை எஸ்.எஸ்.பி கலைவாணன் ஆலோசனைப்படி காலப்பட்டு போலீசார் மீண்டும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் சிசிடிவி கேமரா புட்டேஜ்களை கேட்டுள்ளனர்.

மேலும், ‘இவ்வளவு செக்யூரிட்டிகள் இருந்தும் வெளிநபர்களை எப்படி பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கிறீர்கள். பிரச்சனை நடந்து இரண்டு நாட்கள் கடந்தும் ஏன் புகார் கொடுக்கவில்லை’ என கேட்டுள்ளனர்.

அதற்கு துணை வேந்தர் மோகன், ‘சார் நானும் விசாரித்துவிட்டேன். பாலியல் வன்கொடுமை எதுவும் நடக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் அத்துமீறி வந்து மாணவர்களை மிரட்டியுள்ளனர். அதற்காக மட்டும் நடவடிக்கை எடுங்கள். எங்கள் பதிவாளர் மூலமாக புகார் கொடுக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பதிவாளர் மூலமாக காலாப்பட்டு காவல்நிலையத்தில், வெளிநபர்கள் பல்கலைக்கழகத்தில் அத்துமீறி வந்ததாக இன்று மாலை புகார் கொடுக்கப்பட்டுள்ளது, முதற்கட்ட விசாரணையில் பல்கலைக்கழகத்திற்குள் வந்த நான்கு பேரில் ஒருவரின் சித்தி பல்கலைக்கழத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருவது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். சிசிடிவி கேமரா மூலம் நான்கு பேரையும் அடையாளம் கண்டு தேடி வருகின்றனர்.

மேலும், இந்த வழக்கு குறித்து எஸ்.எஸ்.பி கலைவாணன் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்” என்கிறார்கள்.

வணங்காமுடி

தை மாத நட்சத்திர பலன்கள்: ஆயில்யம்

தேதி குறிச்சாச்சா? – அண்ணாமலைக்கு கீதா ஜீவன் கிடுக்குப்பிடி கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share