புதுச்சேரியில் மறைந்த பிரபல ரவுடி தெஸ்தான் மகன் ரிஷி மற்றும் ஜேஜேநகர் ஆதி, திடீர் நகர் தேவா ஆகிய மூன்று பேர் ரெயின்போ நகரில் உள்ள பாழடைந்த வீட்டில் நேற்று (பிப்ரவரி 13) கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. puducherry rowdy sathya killed
இதுதொடர்பாக நமது மின்னம்பலம்.காம் தளத்தில், “பைக்கில் அழைத்து சென்று 3 இளைஞர்களை கொலை செய்த ரவுடிகள்!” என்ற தலைப்பில் நேற்று செய்தி பதிவிட்டிருந்தோம்.
அதில், ”மூவர் கொலையானது டிவி நகரைச் சேர்ந்த தகடு சத்யா என்ற ரவுடிக்கும், அரியாங்குப்பத்தைச் சேர்ந்த விக்கி ரவுடிக்கும் முன்விரோதம் காரணமாக நடந்தது என்றும்,
சத்யா கேங் தான் கொலை செய்யப்பட்ட மூவரையும் இரவு 11 மணி பாழடைந்த வீட்டிற்கு அழைத்து சென்றது. எனினும் கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குற்றவாளியை கைது செய்தால் தான் தெரியும்” என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில் குற்றவாளிகளை தேடிவந்த பெரியகடை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று ரவுடி சத்யா, அவரது கூட்டாளிகளான சஞ்சீவ், சாரதி, சரண் உட்பட 10 பேரை கைது செய்தனர்.

அப்போது சத்யா அளித்த வாக்குமூலத்தில், “நானும் எனது கூட்டாளிகள் 5 பேரும் இரண்டு பைக்கில் புதுச்சேரில் பீச்சிற்கு கடந்த 13ஆம் தேதி இரவு சென்றிருந்தோம். அப்போது ரிஷி, ஆதி, தேவா ஆகிய மூவரும் ஒரே பைக்கில் அங்கு வந்தனர். எங்களுக்கு லைன் (கொலைக்கு திட்டமிடுவது) பார்த்ததைக் கண்டு அவர்களை அழைத்து விசாரித்தோம்.
பின்னர் நாங்கள் வந்த இரண்டு பைக், அவர்கள் வந்த ஒரு பைக் என மூன்று பைக்கில் ஒவ்வொருவரையும் நடுவே ஏற்றிக்கொண்டு ரெயின்போ நகரில் உள்ள பாழடைந்த வீட்டிற்கு அழைத்து சென்றோம்.
அங்கு போகும்போதே எனது ஆட்களிடம், ’பொருட்களை பழைய வீட்டிற்கு எடுத்துட்டு வாங்க என்று சொல்லிவிட்டேன்.
அங்கு போய் சேர்ந்ததும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் கத்தி முனையில் விசாரித்தோம். மூவரும் உயிர்பயத்தில் கெஞ்சினார்கள். அப்போது கூட இருந்தவர்கள் அவர்களை சுமார் 2 மணி நேரம் சித்ரவதை செய்தோம். பின்னர் நான் வெட்ட என்னுடன் சேர்ந்து மற்றவர்களும் அவர்களை வெட்டிக் கொன்றனர்” என தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள ரவுடி சத்யா மீது 7 கொலைகள் உட்பட 15 வழக்கு உள்ளது. சிறுவயது முதலே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி சத்யா, பின்னாளில் கூலிப்படை தலைவனாக செயல்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது வலதுகரமாக இருந்த முகிலனை கொன்றதற்கு பழிக்குப்பழியாக தான், ரவுடியின் விக்கியின் ஆட்களான ரிஷி, ஆதி, தேவா ஆகியோரை கொலை செய்துள்ளது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடியிருப்பு நிறைந்த பகுதியில் மூன்று வாலிபர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.