இடைத்தேர்தல் நடந்து வரும் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியில் இருந்து கொண்டு வந்த சாராயத்தை குடித்து நேற்று 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இன்று (ஜூலை 10) கூடுதலாக 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் மறையவில்லை. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இடைத்தேர்தல் நடைபெற்று வரும் விக்கிரவாண்டி அருகே பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் புதுச்சேரி மாநிலம் திருக்கனூரில் விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி வந்து கடந்த 8ஆம் தேதி இரவு தனது நண்பர்களுடன் குடித்துள்ளார். இதில் சக்திவேல் உட்பட 11 பேரின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் புதுச்சேரியில் இருந்து சாராயம் வாங்கி 11 பேரும் குடித்தனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் கஞ்சனூர் மதுரா பூரி குடிசை கிராமத்தில் 08.07.2024 அன்று புதுச்சேரி சாராயத்தை குடித்த 7 நபர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக வரப்பெற்ற தகவலையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் அன்றே 7 நபர்களையும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஐந்து நபர்கள் சிகிச்சை முடிந்து இன்று அவரவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இரண்டு நபர்களுக்கு தொடர் குடிப்பழக்கம் இருந்து வந்ததால், மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர்களால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இவர்கள் இருவரும் நலமாக உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி துயரத்திற்கு பின்னரும் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து சாராயம் குடித்து பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது காவல்துறை மீதான கேள்வியை எழுப்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆம்ஸ்ட்ராங் கொலை… போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தொடர்பு?
விக்கிரவாண்டி : வாக்குச்சாவடியில் நின்ற பெண்ணுக்கு கத்திக்குத்து!