புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வன், உதவி காவல் ஆய்வாளர் ஜெயகுருநாதன் இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். puducherry girl harassment case
புதுச்சேரி சோலைநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆர்த்தி வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் மார்ச் 5ஆம் தேதி சாக்கடையில் மூட்டையில் கட்டப்பட்டு கிடந்த சிறுமியின் உடலை மீட்டனர்.
இந்த விவகாரத்தில் சிறுமி வசித்த அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது விவேகானந்தனும், 19 வயது கருணாஸும் குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டு, கொலை செய்தது தெரியவந்தது.
உடல் அடக்கம்
இதற்கிடையே சிறுமியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி ஊர்மக்கள் வரை ஏராளமானோர் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் இன்று நடைபெற்றன. இதனால் சோலை நகர் பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
காலை 10 மணியளவில் சிறுமியின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலம் புறப்பட்டது. அந்த வாகனத்தின் முன்பு சிறுமி பயன்படுத்திய பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் தொங்கவிட்ப்பட்டிருந்தன.
ஊர்வலத்தில் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து பாப்பம்மாள் கோயில் மயானத்தில் குடும்ப முறைப்படி உடல் அடக்கம் செய்யப்பட்டது. புத்தகப் பை, பொம்மை, உடைகளுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
போலீசார் மாற்றம்
இவ்வழக்கு தொடர்பாக சீனியர் எஸ்.பி கலைவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அந்தமான் நிக்கோபார் சீனியர் எஸ்பி.யாக இருந்த கலைவாணன், இரண்டு நாட்களுக்கு முன்பு புதுச்சேரி காவல்துறை தலைமையிட எஸ்எஸ்பி-யாக பொறுப்பேற்றார். அவரை புதுச்சேரி அரசு சிறுமி வழக்கில் சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளது.
விசாரணை பொறுப்பை ஒப்படைக்கும் முன்பே தன்னார்வமாக ரகசிய விசாரணை செய்து சிறுமி வழக்கு தொடர்பாக பல தகவல்களை சேகரித்துள்ளார் எஸ்பி கலைவாணன்.
பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்களை தெரிந்துகொண்ட எஸ்.பி.கலைவாணன், அப்பாவி சிறுமி எப்படியெல்லாம் துடிதுடித்திருப்பார் என தனக்கு நெருக்கமான துறை சார்ந்தவர்களிடம் பேசியுள்ளார்.
இதைதொடர்ந்து, முதல் கட்டமாக முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் தனசெல்வன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஜெய குருநாதன் இருவரையும் மாற்றப் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக இன்ஸ்பெக்டராக கண்ணனும், சப் இன்ஸ்பெக்டராக சிவபிரகாஷும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காவல் நிலையத்தில் உள்ள மற்ற காவலர்கள் மீது விசாரணை செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். puducherry girl harassment case
சிறுமி ஆர்த்தி கொலையைப் பற்றியும், அதற்கான பின்னணி, மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க என்ன வழி என பலவிதமான கோணங்களில் வழக்கை விசாரித்து வருகிறார் சீனியர் எஸ்.பி.கலைவாணன்.
-வணங்காமுடி, பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Heatwave: இந்த மாவட்டங்கள்ல ‘சூரியன்’ ஓவர்டைம் வேலை செய்யுதாம்!
மயிலாடுதுறை மல்லுக்கட்டு! யாருக்கு சீட்?
எலக்ஷன் ஃபிளாஷ்: இன்று அப்பாயின்ட்மென்ட் கேட்கும் அதிமுக: என்ன செய்யப் போகிறார் ராமதாஸ்?