2024-ம் ஆண்டு பிறக்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதுச்சேரி தற்போது தயாராகி வருகிறது.
சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசுக்கும் அதிக வருவாய் கிடைக்கிறது. இதுதவிர, இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் பட்டியலில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் 2024-ம் ஆண்டு பிறக்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதுச்சேரி தற்போது தயாராகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து புத்தாண்டு வரை ஒரு வார காலத்திற்கு புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் தங்கி பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி செல்வது வழக்கம்.
அதுபோன்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக, புதுவையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள், பீச் ரிசார்ட்டுகளில் உள்ள அறைகளை சுற்றுலா பயணிகள் வேகமாக முன் பதிவு செய்து வருகின்றனர். இதனால் ஹோட்டல்களில் உள்ள அறைகள் வேகமாக நிரம்பி வருகின்றன .
மேலும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு முதல் நள்ளிரவு வரை வர்த்தக சபை, பாண்டி மெரீனா, அசோகா பீச் ரிசார்ட், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியார் மூலம் பிரபலங்கள் பங்கேற்க கூடிய இசை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவும் தொடங்கியுள்ளது.
குறிப்பாக பாண்டி மெரீனா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டு இசை நிகழ்ச்சிக்காக ஆண்களுக்கு தலா ரூ.3,500 ஆகவும், பெண்களுக்கு தலா ரூ.2,500 ஆகவும் என குறைந்தபட்ச நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு இடங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் ஒருவருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.1,000 ஆகவும், அதிகபட்ச கட்டணமாக ரூ.5,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் அளவற்ற அசைவம் மற்றும் சைவ உணவு, மதுபானம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சீகல்ஸ் கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம், பாரடைஸ் கடற்கரை, காரைக்கால் சீகல்ஸ் ஆகிய நான்கு இடங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான நிகழ்ச்சிகளை தனியார் மூலம் நடத்தி கொள்ள ஒப்பந்த புள்ளி வரவேற்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு புதுவை கடற்கரை சாலை காந்தி திடல் மற்றும் பாண்டி மெரீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குவிந்தனர். அதேபோல், இந்தாண்டும் சுற்றுலா பயணிகள், பொது மக்கள் குவிந்த புத்தாண்டை கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
கொம்பன் தென் மாவட்டத்துல எறங்கிட்டான் மாமா: அப்டேட் குமாரு
பலமான யு மும்பாவை வீழ்த்தி… முத்தான 3-வது வெற்றியை பதிவு செய்யுமா தமிழ் தலைவாஸ்?