பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் இன்று (மார்ச் 8) இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி சோலைநகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவேகானந்தன், கருணாஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் உடல் நேற்று (மார்ச் 7) அடக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில், சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக சார்பில் இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல ஆட்டோ, டாக்ஸி போன்ற வாடகை வாகனங்களும் இயக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இருந்து புதுவை செல்லும் அரசு பேருந்துகள் முள்ளோடை, மதகடிப்பட்டு, கோட்டக்குப்பம், கோரிமேடு வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளில் பகல் மற்றும் நண்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முழு அடைப்பு நடைபெறுவதை ஒட்டி பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும், மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாத வகையில், புதுச்சேரி முழுவதும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பல்வேறு போராட்டங்கள்: மூன்று அடி இளைஞர் டாக்டரானது எப்படி?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!