சென்னையில் ரூ.430 கோடி மதிப்பில் கழிவறைகள்!

தமிழகம்

சென்னை மாநகராட்சி சார்பில் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கழிப்பறை அமைக்கும் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில்  கையெழுத்தாகியுள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 954 பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இந்தக் கழிப்பிடங்கள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சுகாதார கட்டமைப்பினை உறுதி செய்திட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்கள் 5, 6 மற்றும் 9 ஆகியவற்றில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் அனைத்து கழிப்பறைகளையும் பராமரிக்கவும், தேவைப்படின் புதிய கழிப்பறைகளை கட்டி பராமரிக்கவும் ஒரு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவித்தார்.

அதனடிப்படையில், சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருதல் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்த்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு, முன்னோடி திட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் கூட்டு முறையில் ரூ.430 கோடி மதிப்பீட்டில் ஆர்.எஸ்.பி. ஆர்ச் பிராஜக்ட் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட், மெட்டெக் டிசைன் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ஜினியர்ஸ்,பெர்ஹ்ரா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று தனியார் நிறுவனங்களின் கூட்டமைப்பின் மூலம் பணிகள் மேற்கொள்ள நேற்று (மார்ச் 8) ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ராயபுரம் மண்டலத்தில் புதிதாக 51 பொதுக்கழிப்பறைகளும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அதிக அளவு சிதிலமடைந்த 71 கழிப்பறைகளில் மறுசீரமைப்பு பணிகளும், குறைந்த அளவு சிதிலமடைந்த 105 கழிப்பறைகளில்  மறுசீரமைப்பு பணிகளும் என மொத்தம் 227 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  இந்தக் கழிப்பறைகள் 2,159 இருக்கை வசதிகள் கொண்டதாகும்.  

திரு.வி.க.நகர் மண்டலத்தில் புதிதாக 36 பொதுக் கழிப்பறைகளும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அதிக அளவு சிதிலமடைந்த 17 கழிப்பறைகளில் மறுசீரமைப்பு பணிகளும், குறைந்த அளவு சிதிலமடைந்த 81 கழிப்பறைகளில் மறுசீரமைப்பு பணிகளும் என மொத்தம் 134 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த கழிப்பறைகள் 988 இருக்கை வசதிகள் கொண்டதாகும்.  

தேனாம்பேட்டை மண்டலம் மெரினா கடற்கரையில் புதிதாக 3 பொதுக்கழி ப்பறைகளும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குறைந்த அளவு சிதிலமடைந்த 8 கழிப்பறைகளில்  மறுசீரமைப்பு பணிகளும் என மொத்தம் 11 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  இந்த கழிப்பறைகள் 123 இருக்கை வசதிகள் கொண்டதாகும். 

மேலும், இது பெருநகர சென்னை மாநகராட்சியின் மற்ற மண்டலங்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள முக்கிய பகுதிகளான அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களை உள்ளடக்கிய பகுதிகளில் பணிகள் மேற்கொள்ள தற்போது சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

ராஜ்

என் மனைவி ஜெயலலிதா அம்மையாரை விட ஆயிரம் மடங்கு பவர்புல்: அண்ணாமலை

ஒரே நாளில் இரண்டு நல்ல செய்திகள்: விஜயகாந்த் ரசிகர்கள் குஷி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *