தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை இரண்டு, மூன்று மடங்கு உயர்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளன.
வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாட உள்ளனர். அதற்காகக் கல்வி மற்றும் வேலை நிமித்தமாகச் சென்னை, கோவை போன்ற மாநகரங்களிலும் வெளியூர்களிலும் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துச் செல்கின்றனர்.
ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்வதால் அவர்களது வசதிக்காக பண்டிகை நாட்களில் தமிழக அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது.
பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசல்களிலிருந்து மக்களுக்கு நிவாரணம் கிடைத்தாலும் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்விலிருந்து தப்ப முடிவதில்லை.
தீபாவளி பண்டிகை மட்டுமல்ல, அனைத்து பண்டிகை நாட்களிலும் தொடர் விடுமுறை நாட்களிலும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி விடுகின்றன.
மக்களும் வேறு வழியில்லாமல் அதிக கட்டணம் செலுத்திப் பயணிக்கின்றனர். ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு குறித்து மக்கள் சிலர் தங்களது கருத்துகளை மின்னம்பலம் உடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அனுஷியா
”சாதாரண நாட்களை விடப் பண்டிகை நாட்களில் மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்திவிடுகிறார்கள். ஆனால் பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டுமென்பதற்காக வேறு வழியில்லாமல் விலையேற்றத்தை ஏற்று கொண்டு பயணிக்கிறோம்”
பாரத்
“இது போன்ற நேரங்களில் தான் குடும்பத்தோடு நேரத்தைச் செலவிட வேண்டும் என்று நினைக்கின்றோம். கையில் இருக்கிற பணத்தைப் போக்குவரத்துக்கே செலவழித்துவிட்டால் குடும்பத்தோடு எப்படி மகிழ்ச்சியாக நேரம் செலவிட முடியும்”
சாஸ்த்ரா
”இந்த நேரத்தில் கட்டணம் அதிகமாகத் தான் இருக்கும். ஆம்னி பேருந்துகளும் சம்பாதிக்க வேண்டும் அல்லவா?.
ஸ்வேதா
”ஊருக்குச் சென்று திரும்புவதற்காக விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளேன். பேருந்து கட்டணத்தை விட விமான கட்டணமே குறைவாகத் தான் இருக்கிறது”.
இராமச்சந்திரன்
“ஆம்னி பேருந்தில் சென்றால் சீக்கிரம் செல்லலாம், அரசு பேருந்தில் சென்றால் தாமதமாகும்”
கர்நாடகாவைச் சேர்ந்த கோவிந்த்
”மக்களின் அவசரத்தை புரிந்துகொண்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது கொடுமை”
ஆம்னி பேருந்து ஓட்டுநர் பரமசிவம்
”வண்டிக்கு ஒரு வருடத்திற்கு இன்சூரன்ஸ் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய். வண்டி ஓடினாலும் ஓடாவிட்டாலும் மாதமானால் வரி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கட்டியாக வேண்டும்.
இரவு பகல் வண்டி ஓடினால் ஒரு நாளைக்கு 16 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் போட வேண்டும். சுங்கச்சாவடியில் பணம் செலுத்த வேண்டும். அதனால் தான் பண்டிகை நாட்களில் கட்டணத்தை உயர்த்துகிறோம்”
ராகேஷ்
“கட்டணத்தை உயர்த்துவதால் 10 ஆயிரம் 20 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்களால் 1,000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை”
பிரதீப்
”அலைச்சல் இல்லாமல் நாம் செல்ல வேண்டிய இடத்திற்குச் சீக்கிரமாகச் செல்ல வேண்டும் என்ற மக்களின் மனநிலையை ஆம்னி பேருந்துகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதில் பயணிப்பதும், தவிர்ப்பதும் மக்களுடைய விருப்பம்.
இதனால் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்துவது தவறாகத் தெரியவில்லை”
ராம் பிரபாகரன்
“நான் நிறைய முறை தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்தில் சென்றுள்ளேன். பேருந்தில் ஆட்கள் இல்லை என்று அவர்களே கூப்பிடுவார்கள், அப்போது, பேருந்து கட்டணமும் குறைவாகத் தான் இருக்கும்.
ஆனால் பண்டிகை நாட்களில் அரசு பேருந்துகளில் இடம் கிடைக்காது என்பதால் அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தைச் செலுத்திப் பயணிக்க வேண்டியுள்ளது”
ஆம்னி பேருந்து ஓட்டுநர் வேணுகோபால்
”நாங்கள் வருடம் 365 நாட்களும் அதிக கட்டணம் வசூலிப்பதில்லை. சாதாரண நாட்களில் குறைவான கட்டணத்தை வசூலிக்கும் போதும் அரசாங்கத்திற்குச் சரியாக வரி செலுத்தி வருகிறோம்.
தற்போது அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. இதனால் அதிகளவு பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணிப்பதில்லை”
தொகுப்பு: ஹரிஹரன்
படங்கள்: லோகேஷ்
போக்குவரத்து விதி: மீறினால் அபராதம் இல்லை!
ஸ்ருதிஹாசனின் நிறைவேறிய ஹாலிவுட் கனவு!