‘மிக்ஜாம்’ புயல் காரணமாக நாளை (டிசம்பர் 4) 4 மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (03-12-2023) காலை 05.30 மணி அளவில் ‘மிக்ஜாம்’ புயலாக வலுப்பெற்று, 11.30 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும்,
சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 380 கிலோமீட்டர் தொலைவிலும்,
பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும்.
பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும்.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பொது நிறுவனங்கள் / பெருநிறுவனங்கள், வாரியங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 04.12.2023 (திங்கட்கிழமை) பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது.
போலீஸ், தீயணைப்பு சேவை, உள்ளாட்சி அமைப்புகள், பால் விநியோகம், நீர் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகம், மின்சாரம், போக்குவரத்து, எரிபொருள் விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், மற்றும் பேரிடர் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலகங்கள் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சத்தீஸ்கர் : 2018ல் விட்டதை 2023ல் பிடித்த பாஜக!
வெறும் 99 வாக்குகள் வித்தியாசம்… 3-வது இடத்துக்கு தள்ளப்படும் முதல்வர் கேசிஆர்?
ராஜஸ்தான்: பின்தங்கும் காங்கிரஸ்… ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக!