குவாரியை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட கிராமத்தினர்!

தமிழகம்

குவாரியை மூடக்கோரி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பீல்வாடி கிராமத்தினர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியம், சித்தளி ஊராட்சிக்குட்பட்ட பீல்வாடி கிராம மக்கள் நேற்று மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பேசியுள்ள அவர்கள், “பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பீல்வாடி கிராமத்தில் உள்ள கல்குவாரியைத் தடை செய்ய வேண்டும். குவாரிக்கு அதிகமான லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக சித்தளி ஊராட்சி மன்றத்தில் மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அரசு விதிமுறைகளை மீறி குவாரி செயல்பட்டு வருகிறது. இதை மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. குவாரி உரிமத்தை ரத்து செய்து மூடக்கோரி ஒரு ஆண்டுக் காலமாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட கிராம மக்கள் கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்டிருந்த பேப்பரை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது சாரல் மழை பெய்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பெரம்பலூர் போலீஸார் தர்ணாவில் ஈடுபட்டவர்களில் சிலரை பேச்சுவார்த்தைக்காக ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

குவாரி உரிமத்தை ரத்து செய்து மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

-ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.