2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்!
புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை இன்று (மே 23) முதல் பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்று நேரடியாக மாற்றிக் கொள்ளலாம்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிதாக அச்சிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.
ஆனால் மக்களிடத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. ஒரு கட்டத்தில் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சிடப்படுவதே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தான், கடந்த 19 ஆம் தேதியன்று ‘தூய்மையான ரூபாய் தாள் கொள்கையின் படி’ 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இருப்பினும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளைப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது.
மேலும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் அல்லது மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் முறை நடைமுறைக்கு வருகிறது.
மக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான சில அறிவுரைகளையும் ரிசர்வ் வங்கி வங்கியுள்ளது.
அவை, ஒரு நபர் ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் வரையிலான 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். 20,000 ரூபாய்க்கு மேல் மாற்ற வேண்டுமானால் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. வங்கிக் கணக்கு வைத்திருக்காதவர்கள் கூட எந்த வங்கியில் வேண்டுமானாலும் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மட்டுமல்லாது ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களிலும் மாற்றிக் கொள்ளலாம். (அகமதாபாத், பெங்களூர், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம்)
2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றவோ டெபாசிட் செய்யவோ வங்கியில் மறுப்பு தெரிவித்தால், வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட வங்கியில் முதலில் புகார் அளிக்கலாம்.
வாடிக்கையாளர் அளிக்கும் புகார் மீது சம்பந்தப்பட்ட வங்கி ஒரு மாதத்திற்குள் பதிலளிக்கவில்லை என்றால், ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் திட்டம் (RB-IOS), 2021 இன் கீழ் RBI இன் புகார் மேலாண்மை அமைப்பு போர்ட்டலில் (cms.rbi.org.in) புகாரைப் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்களில் பொதுமக்கள் கூட்டம் குவியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மோனிஷா
நம்பர் 1: இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா
டாஸ்மாக் சரக்கில் சயனைடு: கொலையா? தற்கொலையா?