பரந்தூர் விமான நிலையம் கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கிராம பிரதிநிதிகள் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுற்றுவட்டார 13கிராமப் பகுதிகளை உள்ளடக்கி பரந்தூரில் பசுமை வெளி விமான நிலையத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகள் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நெல்வாய், பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 147நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று(டிசம்பர் 19)ஏகனாபுரம் கிராமத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பல நூறு பேர் கிராம உரிமை மீட்பு பேரணி நடத்தினர்.
அப்போது காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தி அமைச்சர்களுடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று(டிசம்பர் 20) சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் குழுவை கிராமப் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, கிராம பிரதிநிதி சுப்பிரமணி, பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதால் விவசாய நிலங்கள், நீரோடைகள், குட்டைகள் குளங்கள் பாதிப்புக்குள்ளாகும், விமான நிலையம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறினார்.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக சாத்திய கூறுகள் ஆய்வு செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், ஆய்வு அறிக்கை அடிப்படையிலேயே அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தங்களிடம் அமைச்சர்கள் தெரிவித்ததாக பிரதிநிதிகள் குழுவினர் தெரிவித்தனர்.
147ஆவது நாளாக பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், நிலையம் கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கலை.ரா
திமுக எம்பி கேள்வி: தமிழிலேயே பதிலளித்த நிர்மலா சீதாராமன்
“40 தொகுதி வாரிசு/ வாய் உதார் வேணா மாட்டிக்காத வீணா” – தல, தளபதி ரசிகர்கள் மோதல்!