நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்வது சம்பந்தமான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கோரியும், தேயிலை வாரியம் உடனடியாக 30-ஏ சட்டத்தை அமல்படுத்த கோரியும் அங்கு உள்ள விவசாயிகள் கடந்த 1ஆம் தேதி முதல் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது 11-வது நாளாக நேற்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில் நேற்று 11-வது நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பேரகணி, தாந்தநாடு, புடியங்கி , கன்னேரிமுக்கு, அளியூர், ஒடேன், உல்லத்தட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக விவசாயிகள் அந்தந்த கிராமங்களில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு குலதெய்வம் எத்தையம்மன் கோயிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் அம்மனை மனமுருக வழிபட்டனர். பின்னர் மீண்டும் பேரணியாக வந்திருந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேபோல ஊட்டியில் உள்ள குருத்துளி, தங்காடு ஆகிய பகுதிகளிலும் தேயிலை விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தேயிலை பறிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நீலகிரி தேயிலை விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்திருந்த தேயிலை வாரிய உறுப்பினர் ராஜேஷ்சந்தர், “தேயிலை தொழிற்சாலைகள் சட்டம் 30-ஏ பிரிவில் தற்போது தேயிலை விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் தேயிலை வர்த்தகர்களை உடனடியாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்துள்ளார்.
ராஜ்
டிஜிட்டல் திண்ணை: நெரிசல், ஊழல்… ஆன் லைன் புகார்கள்! ரகுமான் மீது வழக்கு?
பாகிஸ்தானுக்கு 357 ரன்கள் இந்தியா இலக்கு!