புதிய பென்ஷன் திட்டத்தில் பணிபுரிந்து இறந்தவர்கள் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து, கையேந்தும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு CPS ( contribution pension scheme) ஒழிப்பு இயக்கம்’ எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
கடந்த மே 1 ஆம் தேதி இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் ராஜேஸ்வரன் தலைமையில் மதுரை மாநகரில் ஆலோசனைகள் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு முக்கிய முடிவு எடுத்தனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
புதிய பென்ஷன் திட்டத்தில் பணிபுரிந்து இறந்த சுமார் 300 குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு சேரவேண்டிய பணத்தை கொடுக்க வலியுறுத்தி திருச்சி மாநகரில் மே 19 ஆம் தேதி உண்ணாவிரதம் மற்றும் கையேந்தும் போராட்டம் நடத்துவது,
அதற்காக 30 ஆயிரம் துண்டு பிரசுரம் 2 ஆயிரம் சுவரொட்டிகள் அச்சடிப்பது.
ஜூன் 27 அன்று தற்செயல் விடுப்பு போராட்டம் செய்வது, அதற்காக ஜூன் 5 முதல் 23 வரையில் மூன்று குழுக்களாக பிரிந்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் இயக்கம் நடத்துவது,
பிரச்சாரத்திற்காக ஒரு லட்சம் துண்டு பிரசுரங்கள் 10 ஆயிரம் சுவரொட்டிகள் அச்சடிப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் கண்ணன் மின்னம்பலத்திடம் கூறுகையில்,

“திமுக தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்ததும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்தும் என்று கூறியது.
ஆனால் அரசு ஊழியர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவில்லை, மாறாக மக்களுக்கு எதிரான விரும்பாத திட்டங்களை அமல்படுத்துகின்றனர்.
பிறகு தற்காலிகமாக ரத்து செய்கின்றனர். அது என்ன திட்டம் என்று உங்களுக்கே தெரியும். ( திருமணம் மண்டபம் விளையாட்டு மைதானங்களில் பார் வசதி)
கான்ட்ரிபுஷன் பென்ஷன் ஸ்கீம் அரசு ஊழியர் ஊதியத்திலிருந்து 10%மும் அரசு 10% சேர்த்து 20 % பணத்தை மாதம்தோறும் ஓய்வு ஊதிய ஒழுங்கு முறை ஆணையத்தில் செலுத்த வேண்டும்.
புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்து விரும்பும் மாநில அரசு, ஓய்வு ஊதிய ஒழுங்கு முறை ஆணையத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும்.
ஆனால் தமிழக அரசு கடந்த 20 வருடமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் பணத்தையும் செலுத்தாமல் 66 ஆயிரம் கோடி அரசு ஊழியர்களுக்கு சேரவேண்டிய பணத்தை, தமிழக அரசே வைத்துள்ளது. அந்த பணத்திலிருந்து என்னென்ன செய்கிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து பல மாநிலங்களில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்தியுள்ளனர்.
முதலில் ராஜஸ்தான் மாநிலம் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்தி இந்திய முழுவதும் விளம்பரம் கொடுத்தனர்.
இரண்டாவதாக ஜார்கண்ட், மூன்றாவதாக சத்தீஸ்கர், நான்காவது பஞ்சாப், ஐந்தாவது இமாச்சல பிரதேசம், ஆகிய ஐந்து மாநிலங்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்தியுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் பழைய பென்ஷன் திட்டத்தையே தொடர்ந்து வருகின்றனர்.
ஆனால் தமிழ்நாடு அரசு போதையில் தடுமாறுவதுபோல் தடுமாறி வருகிறது.
புதிய பென்ஷன் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் சுமார் 3000 பேர். அதில் இறந்தவர்கள் 300 பேர், இவர்களுக்கு பிடித்த பணத்தை கொடுக்க முன்வர யோசிக்கிறது தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக கலைஞர் இருந்தார்.
ஆனால் அவரது மகன் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு எதிராக இருக்கிறார். அரசு ஊழியர்களை வேதனை செய்பவர்கள் யாரும் ஆட்சியில் நீடிக்க முடியாது” என்று வேதனையுடன் கூறினார்.
வணங்காமுடி
’பேரிழப்பு’ : மனோபாலாவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!
மனோபாலா மறைவு அதிமுகவுக்கு இழப்பு : ஈபிஎஸ்