பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக முதலமைச்சருடன் பேசி மாற்று ஏற்பாடு செய்வதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளதால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையை அடுத்துள்ள பரந்தூரில் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள 13க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அழைத்துப் பேச வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பூவுலகின் நண்பர்கள், விவசாய அமைப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை தா.மோ.அன்பரசன் ஆகியோருடன் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவுடன் இன்று (அக்ரோபர் 15) பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த போராட்டக் குழுவினர், “மத்திய – மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பரந்தூர் விமானநிலையத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட 13 கிராமங்களால் குழு ஏற்படுத்தப்பட்டது.
அந்தக்குழுவின் சார்பாக ஏகனாபுர கிராம குடியிருப்போர் மற்றும் விவசாய நல கூட்டமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டு, அந்தக் குழுக்கள் சார்பாக ஏறக்குறைய 80 நாட்களாக பல்வேறு போராட்டங்களை எடுத்து வருகிறோம்.

அரசின் கவனத்துக்கு எங்களுடைய கோரிக்கை செல்லவேண்டும் எனவும், பரந்தூர் விமானநிலையத் திட்டத்தை அரசு கைவிட்டு விவசாயம், குடியிருப்பு, வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தை தேர்வு செய்யும்படி கோரிக்கை வைத்தோம்.
வரும் 17 ஆம் தேதி சட்டசபையை நோக்கி பேரணி செல்வதாக இருந்தோம். ஆனால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசிடம் உங்கள் கோரிக்கையை தெரிவிக்க ஏற்பாடு செய்கிறோம் என்று அவர்கள் கூறியபடி இன்று (அக்டோபர் 15),
சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

13 கிராம மக்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகிறோம். புவியியல், விவசாயம், பண்பாடு என எங்களுக்கு எப்படியெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை விளக்கிக் கூறினோம்.
நாங்கள் கூறிய அத்தனை கருத்துகளையும் அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி மாற்று ஏற்பாட்டை செய்கிறோம் என்று தெரிவித்தனர்.
எனவே இந்த அரசின் மீது எங்களுக்கு உள்ள நம்பிக்கையால், நாங்கள் இதுவரை நடத்தி வந்த போராட்டங்களை தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
கலை.ரா
தூங்காமல் புலம்பிய கொலையாளி : 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு!