மாணவிகளுக்கு பாதுகாப்பு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம்

பல இடங்களில் பாதுகாப்பு பணிகளுக்கு 10 அடிக்கு ஒரு காவலரை நிறுத்தி வைக்கும் காவல்துறை அதிகாரிகள் மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்கு காவலர்களை நிறுத்தாது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த விக்டோரியா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

அதில் ” மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசு மகளிர் மீனாட்சி கலை கல்லூரி முன்பாக மாணவி ஒருவரின் தந்தையை இளைஞர்கள் தாக்கினர்.

இதன் காரணமாக கல்லூரி முடிந்து மாணவிகள் அச்ச உணர்வால் கல்லூரிக்குள் பதற்றத்துடன் செல்லும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.

இதே போல் மதுரையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியிலும் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அத்துமீறி கல்லூரி வளாகத்திற்குள் சென்று மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டு அட்டகாசங்களில் ஈடுபட்டது போன்ற வீடியோக்களும் வேகமாக பரவியது.

இதன் காரணமாக மகளிர் கல்லூரிகளில் படிக்கக்கூடிய பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மத்திய அரசு சார்பில் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் நிதி ஒதுக்கப்படுகின்றன.

இந்த திட்டமானது 8 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது வரை தமிழகத்தில் உள்ள எந்த கல்லூரி மற்றும் பள்ளிகளிலும் எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படவில்லை.

எனவே பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளின் வாசலில் நிரந்தரமாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக இன்று(நவம்பர் 11) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. மாணவிகளை பாதுகாப்பதற்காக எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பாதுகாப்பு பணிகளுக்கு 10 அடிக்கு ஒரு காவலரை நிறுத்தி வைக்கும் காவல்துறை, மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்கு காவலர்களை நிறுத்தலாமே எனவும் கேள்வி எழுப்பினர்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரையில் மகளிர் கல்லூரி முன்பாக நடந்த இரண்டு சம்பவங்களும், இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சூழ்நிலையில் நிகழ்ந்தவை.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 15க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு முன்பாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

கலை.ரா

சானியா மிர்சா – சோயிப் மாலிக் ஜோடியைப் பிரித்த நடிகை

திண்டுக்கல் பட்டமளிப்பு விழா: பிரதமரை வரவேற்ற முதல்வர்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *