சொத்து வரி உயர்வு செல்லும்: உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழகம்

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30ஆம் தேதி சென்னை மாநகராட்சி, சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்த அரசாணையையும், மாநகராட்சி தீர்மானத்தையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ’சொத்து வரி உயர்வு தொடர்பாக மாநகராட்சி தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, அரசு தீர்மானிக்க முடியாது. மத்திய நிதிக்குழு அறிக்கையின் அடிப்படையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், அதன்பின் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், சொத்து வரியை கணக்கிட முறையான நடைமுறை பின்பற்றப்படவில்லை’ என்றும் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில், சென்னையில் 1998-ம் ஆண்டுக்கு பின் சொத்து வரி உயர்த்தப்படவில்லை எனவும், வரியை உயர்த்துவதற்கான அவசியம் குறித்தும் ஆவண ஆதாரங்களுடன் விளக்கமளிக்கப்பட்டது. மொத்தவிலை குறியீடு, பணவீக்கம், சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாகவும் தெரிவித்த அரசுத்தரப்பு, கடந்த 1977ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்ட நடைமுறையை கடைபிடித்தே தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி, அது குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்தது.

அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, ’நாட்டின் பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப்படி சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்ததில் எந்த தவறும் இல்லை’ எனத் தெரிவித்த நீதிபதி, ’சொத்து வரியை உயர்த்துவது குறித்த அரசாணை என்பது ஆலோசனையாக உள்ளதே தவிர, உத்தரவாக இல்லை’ என தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த அரசாணையின் அடிப்படையில், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி மாற்றியமைக்கப் பட்டுள்ளதற்கு காரணங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, சொத்து வரியை உயர்த்துவது தொடர்பான அரசாணையையும், மாநகராட்சி தீர்மானங்களையும் செல்லும் என தீர்ப்பளித்தார்.

மேலும் அவர், ‘சொத்து வரியை நிர்ணயிக்க பின்பற்றப்படும் நடைமுறையை குறை கூற முடியாது’ எனத் தெரிவித்த நீதிபதி, 2022-23ஆம் ஆண்டுக்கான இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தக் கூறி மனுதாரர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்து, 2023-24ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு முதல், அதாவது வரும் ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த உத்தரவிட்டார்.

சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சிகள், தங்கள் இணையதளங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் சொத்து வரியும், 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் சொத்து வரியும் கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. மேலும் 1,201 முதல் 1,800 சதுர அடி வரை 75 சதவீதமும், 1,800 சதுர அடிக்கு அதிகமான கட்டடங்களுக்கு 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது. வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும் வரி உயர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

குடிநீரில் மனித கழிவு: அதிர்ச்சியில் பட்டியலின மக்கள்

ராகுலின் யாத்திரையைப் புறக்கணிக்கும் முக்கிய தலைவர்கள்: பின்னணி என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *