வருமான வரி கட்டாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம் என்றும், வரி பாக்கி வைத்துள்ளவர்களின் சொத்துகள் அடையாளம் காணப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் வருமான வரி செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுடனான வருமான வரித்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரையில் நேற்று (ஜனவரி 3 ) நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன், பின்னர் மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் “மதுரை மண்டலத்தில் வருமானவரித்துறை வசூல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மதுரை மண்டலத்தில் 2ஆயிரத்து100 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது, அடுத்துவரும் காலாண்டில் கூடுதலாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
அகில இந்திய அளவில் தமிழகம் புதுச்சேரி 1லட்சத்து 8ஆயிரம் கோடி இலக்கில் 70 சதவிதம் வரி வசூலித்துள்ளோம்.
அகில இந்திய அளவில் 17சதவித இலக்கை தாண்டி கூடுதலாக 11சதவிதம் வசூலித்து 28 சதவீதம் வசூலித்துள்ளோம், வரும் நிதியாண்டில் 1.25ஆயிரம் கோடி வசூலிக்கவுள்ளோம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 67லட்சம் பேர் இதில் மதுரை மண்டலத்தில் 9 லட்சம் பேர் உள்ளனர்.
கடைசி வருடத்தில் ஒரு லட்சம் பேர் கூடுதலாக வரி செலுத்தியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 10% பேர் புதிதாக வருமானவரி செலுத்தி வருகின்றனர்.
வருமான வரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். மதுரை மண்டலத்தில் டிடிஎஸ் ரிட்டன் குறித்து ஆலோசனை வழங்கினோம், டிடிஎஸ் பைலில் உள்ள குழப்பம் என்ன என்பது குறித்து வரிசெலுத்துவோர்கள் தெரிவித்தனர்.
வருமானவரித்துறையின் வரி செலுத்துவோருக்கான சேவையை சிறப்பாக செய்துவருகிறோம்.
தற்போது வருமானவரியில் ரீ பண்ட் பிரச்சனை இல்லை, மதுரை மண்டலத்தில் இந்திய அளவில் வரிவசூல் மிகக்குறைவு.
வரி செலுத்துவோரின் புகார்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
வரிபாக்கி வைத்துள்ளவர்கள மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்களது சொத்துகளை ஏலம் விட உள்ளோம், அதன் முலம் வரியை வசூலிக்கவுள்ளோம், தற்போது வரிபாக்கி வைத்துள்ளவர்களின் சொத்துகளை ஆய்வுசெய்து வருகிறோம்.
விவாஸ்வே விஸ்வாகி என்ற முகாம் மூலமாக மதுரை மண்டலத்தில் 600 பேர் பயனடைந்துள்ளனர். படிவம்-5ஐ வழங்கி வரிபாக்கி குறித்த பிரச்சனைகளை முடிவுகளை வழங்கிவருகிறோம். இந்திய அளவில் வரி வசூலில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது” எனக் கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலைக் கழகத்தில் பணி!