பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மதுரையில் சரவணா ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக கட்டிடம் டிசம்பர் 5ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள் இன்னமும் முழுமையாக முடிவடையாத நிலையில் கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து காரைக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தனியார் ஆம்னி பேருந்து நிலையமும் உள்ளது. வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த சாலையை பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர். பத்து மாடிகளுடன் கூடிய இந்த சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது.
ஆனால் பணிகள் எதுவும் முழுமை பெறாத நிலையில் ஏராளமான வாகனங்கள் சாலைகளின் இரு புறங்களிலும் நிறுத்தப்படுகின்றன.
மேலும் இந்த வணிக வளாகத்திற்கு ஆட்டோக்களில் வருபவர்களுக்கு முறையான வசதிகள் எதுவும் செய்யப்படாததால்
அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இச்சாலையை பயன்படுத்துவோரும், அருகில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் சாத்தையார் அணையின் உபரி நீர் வரும் வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் லேக் ஏரியா பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுவதற்கு வாய்ப்புள்ளது.
கட்டிடப் பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பாகவே எவ்விதமான அவசரகால வெளியேறும் வழிகள் இன்றி கட்டிடம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வளவு பெரிய வணிக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக செய்யப்படும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையிலும், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத நிலையிலும் வணிக வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அலுவலர், காவல்துறை ஆணையர், போக்குவரத்து காவல்துறை ஆணையர் மற்றும் பொதுப்பணி துறையின் கண்காணிப்பு பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
கலை.ரா
கொரோனா பரவல்: உறுதியான நடவடிக்கை தேவை – ராமதாஸ்
கடலூர் பனைமரம் அழிப்பு: கூடுதல் மரங்கள் நட அன்புமணி வலியுறுத்தல்!