”வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தப்படும்போது, நில உரிமையாளர்களுக்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை தர வேண்டும்” என மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள வல்லம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காகக் கடந்த 1997 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, 2016ஆம் ஆண்டில் சொற்ப தொகை மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக சிப்காட் சிறப்பு வட்டாட்சியரிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வசந்தா கங்காதரன், நவ்ஷீன் பாத்திமா, அம்ரீன் பாத்திமா, செய்தா மதீன், முகமது இம்ரான் ஆகிய நில உரிமையாளர்கள் தகவல் கேட்டனர். உரிய தகவல் வராததால் சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுக்கள் தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நில உரிமையாளர்கள், சிப்காட் சிறப்பு தாசில்தார் ஆஜராகினர். ”மனுதாரர்களுக்கான தொகை கருவூலத்தில் உள்ளது. அந்த பில்களும் காலாவதியாகிவிட்டன” என சிறப்பு தாசில்தார் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட பின் எஸ்.முத்துராஜ், “வணிக பயன்பாட்டிற்கு நிலங்களைக் கையகப்படுத்தும்போது உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை. இதற்காக அதிகாரிகள், நீதிமன்றங்கள் என ஏராளமான கதவுகளை நில உரிமையாளர்கள் தட்டுகின்றனர். இந்த வழக்கிலும் 1999 முதல் நிலத்துக்கான இழப்பீடு தொகையைப் பெற முடிய்வில்லை.
வணிக பயன்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தும்போது உரிமையாளர்களுக்கு நிலத்துக்கான இழப்பீட்டை முழுதும் தந்துவிட்டால், அந்த தொகையை விரைவில் செலவு செய்துவிடுவர்.
மாறாக, எந்த நிறுவனத்துக்காக அரசு நிலத்தை கையகப்படுத்தியதோ, அந்த நிறுவனம் நில உரிமையாளருக்கு இழப்பீடு தொகையின் ஒரு பகுதியை வழங்க வேண்டும்.
மீதமுள்ள இழப்பீடு தொகைக்கு பதில், சம்பந்தப்பட்ட நிறுவனம் லாபத்தில் ஒரு பகுதியை, நில உரிமையாளர்களுக்கு பங்காக தர வேண்டும். இதுகுறித்து மாநில திட்டக்குழு உரிய சட்டத்தைக் கொண்டுவர ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
இதே முறையை புதிய விமான நிலைய திட்டம், நெய்வேலி நிலக்கரி திட்டம் உள்ளிட்டவற்றுக்கு செயல்படுத்தினால் நிலத்தை தரும் மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை வரும்.
நிலத்தை இழப்பவர்களும் ஏழைகள்தான். ஆகையால், அவர்களுக்கு இழப்பீடு வாங்கி தருவதற்காகச் சட்ட உதவிகளைத் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு செய்து தரவேண்டும். இதன்மூலம் நிலத்திற்கான இழப்பீடுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளும் விரைந்து தீர்த்துவைக்கப்படும்” என உத்தரவு பிறப்பித்தார்.
ஜெ.பிரகாஷ்