சென்னையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்தது தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனையான பிரியா, காலில் முட்டி சவ்வு கிழிந்ததன் காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சேர்ந்தார்.
7 ஆம் தேதி அங்கு அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் வலி குறையாததால் மேல் சிகிச்சைக்காக 10 ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவருக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதன் காரணமாக அவரது காலை வெட்டி எடுக்கும் நிலை ஏற்பட்டது.
அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமாகி நேற்று(நவம்பர் 15) பிரியா உயிரிழந்தார். இதுதொடர்பாக 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், பிரியா மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இன்று(நவம்பர் 16) இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.
மாநில மனித உரிமை ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன் இதை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
தமிழ்நாடு சுகாதாரம், குடும்ப நலத்துறை செயலர் 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புலன் விசாரணை பிரிவுக்கும் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அறிக்கை சமர்ப்பிக்க தவறினால் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
கலை.ரா
உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்: வாழ்த்து கூறிய டிம் குக்
கூட்டணி பற்றி விவாதிக்கிறோம்: கமல் புது முடிவு!