”கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கில் டாக்டர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்” என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனையான பிரியா மரணம் தொடர்பாக, பணிநீக்கம் செய்யப்பட்ட 2 மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதி மன்றம் மறுத்தது.
இந்த நிலையில் மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் தீவிரமாக போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சங்க மாநிலத் தலைவர் செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி தமிழக காவல்துறை கிரிமினல் வழக்கில் மருத்துவர்களை சேர்த்து அவர்களை தனிப்படை அமைத்து தேடி வருவதாக செய்திகள் வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமல் மருத்துவர்களை கொலை குற்றவாளி போல முன்ஜாமீன் மறுத்து உடனடியாக சரணடைய கூறி இருப்பது நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.
இந்த நிகழ்வில் சிவில் கவன குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே மருத்துவர்கள் மீது எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
நோயாளியின் காலை சிகிச்சை செய்யும் நோக்கில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, அதன் பின் கவனக்குறைவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டது வருத்தமாக இருந்தாலும் அது சிவில் நெக்லிஜென்ஸில் மட்டுமே வரும்.
போலீஸ் நடவடிக்கை அதிகப்படியானது. மருத்துவர் செவிலியர் மற்றும் சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு எதிரானது என்று சங்கம் கருதுகிறது. எனவே மருத்துவர் மீது பதியப்பட்ட 304ஏ பிரிவு மாற்றப்பட வேண்டும்.
அதையும் மீறி மருத்துவர் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
தொலைதூர கல்வியில் முறைகேடு: பல்கலைக்கழக ஊழியர்கள் டிஸ்மிஸ்!
திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!