தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை உத்தரவையும் மீறி பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று விடுமுறையை அளித்துள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமுதூர் கிராமத்தில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் கடலூரை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி ஜூலை 13-ம் தேதி அதிகாலை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது.
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அமைதியான முறையில் போராடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்ட சிறிது நேரத்தில் வன்முறை வெடித்தது. பள்ளியை வன்முறையாளர்கள் சூறையாடி அங்கிருந்த பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
இதனையடுத்து, பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜுலை 18 ஒருநாள் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்இ, நர்சரி பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்திருந்தார். ஆனால், அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிகல்வித்துறை எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் அரசின் உத்தரவையும் மீறி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன.
சென்னையில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் மூடப்பட்டன. இது தொடர்பாக அந்தந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டது.
கோவையில் பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் நிலையில் பீளமேடு நேசனல் மாடல் மெட்ரிக்பள்ளி, புலியகுளம் வித்யாநிகேதன் பள்ளி, காந்திபுரம் சுகுணா இன்டர்நேஷனல் பள்ளி, லட்சுமி மில் வித்யா நிகேதன் பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளது.
அதே போல திருப்பூர் மாவட்டத்தில் பாரதி வித்யாபவன், அட்வைதா மெட்ரிகுலேஷன், யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி, சென்சுரி பவுன்டேஷன், பெம் ஸ்கூல், ஸ்பிரிங் மவுன்ட் உள்ளிட்ட பள்ளிகள் விடுமுறையை அறிவித்துள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்திற்கு உட்பட்ட விஜய வித்யாலயா, RMS மெட்ரிகுலேஷன் பள்ளி, கிருஷ்ணா விகாஸ் ஆகிய பள்ளிக்கூடங்கள் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளின் இந்த செயலால் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
- க.சீனிவாசன்