மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரில் செயல்பட்டு வரும் பிரபல பத்ம சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் 20 ஆண்டுகளாக கணக்குபதிவியல் மற்றும் வணிகவியல் ஆசிரியராக ராஜகோபாலன் பணியாற்றி வந்தார்.
2021ஆம் ஆண்டு இவர் மீது பள்ளியின் முன்னாள் மாணவிகள் 8 பேர் பாலியல் குற்றச்சாட்டு வைத்தனர். ஆசிரியர் குறுஞ்செய்தி மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த ஸ்கீரின் ஷாட் போன்றவை ஆதாரபூர்வமாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் ராஜகோபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கில் காவல்துறை மற்றும் ராஜகோபாலன் தரப்பில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி இன்று (நவம்பர் 12) தீர்ப்பு வழங்கினார்.
அதில், ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
8 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளதால் தலா 2 ஆண்டுகள் வீதம் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவிக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.80 ஆயிரத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
2 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் சூர்யா… காத்திருக்கும் ரசிகர்கள்!
சென்னையில் மழை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்: உதயநிதி பேட்டி!