சென்னையில் தனியார் பேருந்துகளா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

தமிழகம்

அரசு பேருந்துகள் தனியார் மயமாவது என்பதற்கு இடமே கிடையாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியானது. சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க கூடாது என்று இன்று (மார்ச் 6) சிஐடியூ போராட்டம் நடத்தியது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்போது விடப்பட்டுள்ள டெண்டர் என்பது உலக வங்கி வழங்கியுள்ள கருத்துரை அடிப்படையில், தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான சாதக பாதகங்களை ஆய்வு செய்வதற்காக ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர் தான் விடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகச் சொல்வது தான் வேடிக்கையாக இருக்கிறது. 2021 பிப்ரவரி 26 ஆம் தேதி இதற்கான ஜிஓ-வை வெளியிட்டவர்களே அதிமுகவினர் தான்.

அந்த ஜிஓ அடிப்படையில் சென்னையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் மூலமாக உலக வங்கி வழங்கியுள்ள பல்வேறு கருத்துரைகளைத் தொகுத்து இந்த ஜிஓ வெளியிடப்பட்டுள்ளது.

அதில் போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தவரை உலக வங்கி வழங்கியிருக்கக்கூடிய கருத்து என்பது மொத்த செலவு ஒப்பந்தம் அடிப்படையில் 500 பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கலாம். அடுத்த ஆண்டு கூடுதலாக இன்னும் 500 பேருந்துகளை இயக்கலாம் என்று உலக வங்கி கருத்துகளை வழங்கியுள்ளது.

அந்த கருத்துக்களின் அடிப்படையில் ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் விடுவதற்கும் அதிமுக ஆட்சியிலேயே ஜிஓவில் இடம்பெற்றுள்ளது. அந்த அரசு செயலின் அடிப்படையில், இந்த செயல்முறை இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

தற்போது விடப்பட்டுள்ள டெண்டர் படி ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, சென்னையில் அரசு வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்த சாதக பாதகங்கள் குறித்து அவர்கள் அறிக்கை அளிப்பார்கள்.

அந்த அறிக்கையை அரசு ஆய்வு செய்து அதன்பிறகே இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பேருந்துகள் தனியார் மயமாவது என்பதற்கு இடம் கிடையாது.
சென்னையில் உள்ள அரசு வழித்தடங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் தான் தனியார் பேருந்துகள் இயங்கும்.

அவை முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற அரசின் கட்டுப்பாடுகளைத் தான் தனியார் பேருந்துகள் பின்பற்ற வேண்டும்.

இதனால் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான சலுகைகள் எதுவும் பாதிக்கப்படாது” என்று பேசியுள்ளார்.

மோனிஷா

நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்!

தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

“தமிழர்களையும் வட இந்தியர்களையும் பிரிக்க முயற்சி”: சிராக் பஸ்வான்

private bus in chennai transport
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *