அரியலூரில் திருமணத்திற்கு உறவினர்களை அழைத்துச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் – தேவி தம்பதியினரின் மகள் திருமணம் அரியலூர் மாவட்டம் செந்துறையில் இன்று (மார்ச் 27) நடைபெற்றது.
திருமணத்திற்கு வரதராஜனின் உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்தில் செந்துறையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு வந்தனர். திருமணம் முடிந்தவுடன் மீண்டும் கார்குடல் கிராமத்தை நோக்கி தேவனூர் வழியாக பேருந்து சென்றது.
அப்போது திடீரென அந்த பேருந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 40 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பேருந்து கவிழ்ந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், விபத்து பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்தன. குறிப்பாக கர்ப்பிணி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய தனியார் பேருந்து ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்