பேருந்துகள் மோதல்: நால்வர் பலி – விபத்துக்குக் காரணம் என்ன?

தமிழகம்

கடலூரில் பட்டம்பாக்கம் பகுதியில் இரு தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் பட்டம்பாக்கம் பகுதியில் ஸ்ரீதுர்கா, சுகம் ஆகிய இரு பேருந்துகள் இன்று (ஜூன் 19) நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

ஸ்ரீ துர்கா பேருந்து பண்ருட்டியிலிருந்து கடலூர் சென்று கொண்டிருந்தது, கடலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சுகம் பேருந்து சென்று கொண்டிருந்தது.

காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகத்துக்குச் செல்வோர் என இரு பேருந்துகளிலும் 100க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

அண்ணாகிராமம் – மேல்பட்டம்பாக்கத்துக்கு இடையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது துர்கா பேருந்தின் வலது பக்க டயர் வெடித்து அதே பக்கமாக பேருந்து இழுத்துச் சென்று எதிரில் வந்த சுகம் பேருந்து மீது மோதியது.

Private bus accident near panruti

இந்த விபத்தில் பேருந்துகளில் பயணித்த 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முதலில் படுகாயமடைந்தவர்கள் கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

ஆம்புலன்ஸ் வசதி அதிகம் இல்லாததால் ஒரு ஆம்புலன்ஸுக்கு 6 முதல் 8 பேர் வரை அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் போலீசார், தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

Private bus accident near panruti

தற்போது படுகாயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, பண்ருட்டி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்ரீ துர்கா பேருந்தை இயக்கிய ஓட்டுநர் அங்காலமணி, சுகம் பேருந்து நடத்துநர் முருகன், சேமக்கோட்டையைச் சேர்ந்த சீனிவாசன், மேல்கவரபட்டை சேர்ந்த தனபால் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

பெரும்பாலோனோருக்குத் தலையில் அடிபட்டிருப்பதால் உயிர்பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Private bus accident near panruti

சிகிச்சை பெறுபவர்களுக்கு அதிகம் ரத்தம் தேவைப்படுவதாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்து வருகின்றனர்.

கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், எஸ்.பி. ராஜாராம் உள்ளிட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

Private bus accident near panruti

விபத்து குறித்து விசாரணை அதிகாரியான பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா கூறுகையில், “தகவல் அறிந்ததும் விபத்து நடந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டோம். இதுவரை 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

ஒவ்வொரு உடலுக்கும் பிரதே பரிசோதனை செய்து, அதன் அறிக்கை பெறுவதற்காக ஒரு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பிரியா

சென்னையில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மைய இயக்குநர்

செந்தில் பாலாஜி வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு!

+1
1
+1
0
+1
0
+1
5
+1
0
+1
1
+1
3

2 thoughts on “பேருந்துகள் மோதல்: நால்வர் பலி – விபத்துக்குக் காரணம் என்ன?

  1. இதில் தமுமுக மீட்புகுழுவினர் விபத்தில் காயம் அடைந்தவர்களை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர் பின்பு அவர்களுக்கு தேவையான ரத்தமானமும் செய்தனர்

    1. மனித நேயம் உள்ளவர்கள். இந்த தகவலையும் சேர்ந்து பதிவு செய்வோம். தமிழ்நாடு சமூக நல்லிணக்க பூமியாகவே தொடரட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *