அரசுப் போக்குவரத்துத் துறையில் ஏற்படும் நஷ்டத்தைச் சமாளிக்கும் வகையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் இரண்டு பக்கவாட்டுப் பகுதிகளிலும் தனியார் விளம்பரங்களை வெளியிட டெண்டர் கோரப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கிவருவதாகக் கூறப்படுகிறது.
அவற்றைச் சமாளிக்க பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் எனவும், தனியாருக்கு பேருந்து சேவையில் அனுமதி அளிக்கப்படும் எனவும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இதற்குப் பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ”போக்குவரத்துத் துறை தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என உறுதியளித்தார்.
அதுபோல் டிக்கெட்டும் உயர்த்தப்படவில்லை. அதேநேரத்தில், அரசுப் போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையிலும் அவற்றின் வருவாயை பெருக்கும் வகையிலும் தமிழக அரசு பலவழிகளில் முயற்சி செய்துவருகிறது.
அதன் முதற்கட்டமாக ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் நாள் மற்றும் மாதம் அடிப்படையில் பார்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதற்கென தனியாகச் சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
பக்கவாட்டுப் பகுதிகளில் விளம்பரம்!
இந்த நிலையில், பேருந்துகளில் விளம்பரங்கள் செய்வதன் மூலம் வருவாயைப் பெருக்க அரசு முடிவுசெய்துள்ளது.
ஏற்கெனவே பேருந்தின் பின்புறத்தில் விளம்பரங்கள் செய்யப்பட்டாலும், அதனால் குறைந்த அளவே வருமானம் வருகிறது.
இதையடுத்து முதற்கட்ட நடவடிக்கையாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் இரு பக்கவாட்டுப் பகுதிகளிலும் விளம்பரம் செய்ய அரசு முன்வந்துள்ளது.
இதற்குமுன் மாநகரப் பேருந்துகளின் பின்புறத்திலும், ஓட்டுநர் இருக்கையின் பின்புறத்திலும் மட்டும் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பேருந்தின் இரண்டு பக்கவாட்டுப் பகுதிகளிலும் தனியார் நிறுவனங்கள் விளம்பரம் செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
அரசின் வருமானத்தைப் பெருக்கும்வண்ணம் இதுபோன்று பிற மாநிலங்களிலும் இரண்டு பகுதிகளிலும் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
அதுபோல சென்னை மாநகரப் பேருந்துகளிலும் விளம்பரம் செய்வதன் மூலம் வருவாயை மேலும் அதிகரிக்க முடியும் என அரசு கருதுகிறது.
அதன்படி, முதற்கட்ட நடவடிக்கையாக 3,000 பேருந்துகளில் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. இது தவிர 500 பேருந்துகளில் பயணிகள் இருக்கையின் பின்புறமும் ‘ஏ4’ அளவில் விளம்பரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான வரவேற்பை தொடர்ந்து மேலும் 1000 பஸ்களில் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படும் என அரசு போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகரத்தில் இயங்கும் குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் பிங்க் நிற மகளிர் பேருந்துகள் சிலவற்றில் அரசு சார்ந்த விளம்பரங்கள் இரண்டுபக்கமும் இருப்பதைப் பார்க்கலாம்.
முக்கியமாக, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பரம் இதன்மூலம் அதிகளவில் விளம்பரப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
அரசு பேருந்துகளில் முதல் பார்சல் சேவை தொடக்கம்!