காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு திண்டுக்கல்லில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 11ஆம் தேதி(நாளை) பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து நாளைய தினம் 2018-19, மற்றும் 2019-20 வருடங்களில் கல்வி பயின்ற 2,314 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது.
இதில் அதிக மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற நான்கு மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் மேடையில் பட்டங்களை பிரதமர் மோடி வழங்குகிறார்.

மேலும் இசைஞானி இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சின்னாளப்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக குண்டு துளைக்காத காரில் விழா நடைபெறும் அரங்குக்கு வருகை தர உள்ளார்.
இங்கு SPG மற்றும் NSG சிறப்புப்படை உட்பட 4,500 போலீசார் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பல்கலைக்கழகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழகத்திற்கு வரக்கூடிய பேராசிரியர்கள் மாணவர்கள், மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பலத்த சோதனைக்கு பின்பு தான் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பிரதமர் வருகையையொட்டி விமான நிலையம் சுற்றியுள்ள கிராமங்களில் வாணவேடிக்கைகள் வெடிக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சின்னாளப்பட்டி, காந்திகிராமம், அம்பாத்துரை, அம்மைநாயக்கனூர், செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் டிரோன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாட்டினை காவல்துறை டிஐஜி ரூபேஷ்குமார்மீனா, மாவட்ட ஆட்சியர் விசாகன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அங்கு பாஜகவினர் இன்று (நவம்பர் 10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் வருகையை ஒட்டி, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், பாஜகவினர் மற்றும் திமுகவினர் தங்களது கட்சிக் கொடிகளை பறக்க விடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதைக் கவனித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு சென்று, “இதுபோன்ற கொடிகளை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கக்கூடாது; பிரதமர் வரும் வழியில் இதுபோன்று கொடிகளை நடவும் அனுமதியில்லை. ஆகையால், இதை உடனே அகற்றுங்கள். ” எனக் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், இருதரப்பினரும் தங்களது கட்சிக் கொடிகளை அகற்ற மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் அனைத்துக் கட்சிக் கொடிகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், போலீசாருக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, பாஜகவினர் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலை நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொடிகளை அகற்றிய திண்டுக்கல் மாவட்ட காவல் துறையை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகச் சொல்லப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கலை.ரா, ஜெ.பிரகாஷ்
மாணவர்களுடன் துபாய் பறந்த அன்பில் மகேஷ்
மாலத்தீவில் தீ விபத்து: 9 இந்தியர்கள் பலி!