44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க இன்று (ஜூலை 28) சென்னை வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக, இன்று அகமதாபாத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மற்றும் சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் வரவேற்றனர். அவர்களுடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பாஜக சார்பில் வானதி சீனிவாசன் வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
விமான நிலையத்தில் ஹெலிஹாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். வந்தடைந்த மோடியை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. வரவேற்றார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட பிரதமர் மோடியை, மக்கள் கைதட்டி வரவேற்றனர். அவரை மேலும் வரவேற்கும் விதமாக நேப்பியர் பாலம் முதல் நேரு விளையாட்டு அரங்கம் வரை சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வழிநெடுகிலும் பிஜேபி தொண்டர்களும் மக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை பார்த்து கையசைத்தபடியே நேரு ஸ்டேடியம் வந்தடைந்தார்.
ஜெ.பிரகாஷ்