தக்காளி மட்டுமல்ல… அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்வு!
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில் மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து வரத்து குறைந்துள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகள் விலை கடந்த ஒரு வாரமாகவே உயர்ந்து வருகிறது.
தினமும் 650 வாகனங்களில் 7,000 டன் காய்கறிகள் வரும் நிலையில் 450 வாகனங்களில் 5,000 டன் காய்கறிகள் மட்டுமே வந்துள்ளது.
இதன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ இஞ்சி 260 ரூபாய்க்கும் பூண்டு 200 ரூபாய்க்கும் பீன்ஸ் 110 ரூபாய்க்கும் பச்சை மிளகாய் 90 ரூபாய்க்கும் குடமிளகாய் 220 ரூபாய்க்கும் பச்சைப் பட்டாணி 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவற்றை வாங்கி செல்லும் வெளி மார்க்கெட் வியாபாரிகள், வாகன வாடகை, மூட்டை கூலி, லாபம் ஆகியவற்றை கணக்கிட்டு, ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை அதிகம் வைத்து விற்கின்றனர்.
சில்லறை விற்பனை கடைகளில் காய்கறிகளை வாங்க செல்லும் பொதுமக்கள், அவற்றின் விலையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இது தொடர்பாக பேசியுள்ள கோயம்பேடு மார்க்கெட் சிறு வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார்,
’’கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்வரத்து குறைவால் அனைத்து காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பீன்ஸ், இஞ்சி, குடமிளகாய், பச்சைப் பட்டாணி விலை அதிகரித்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லாரிகள் மூலம் தினமும் 650 வாகனங்களில் 7000 டன் காய்கறிகள் வரும் நிலையில் தற்போது 450 வாகனங்களில் 5,000 டன் குறைவான காய்கறிகள் வந்ததுள்ளன.
இதன் காரணமாக விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் இந்த மாதம் முழுவதும் நீடிக்கும்.
அடுத்த மாதம் அனைத்து காய்கறிகள் விலை படிப்படியாக குறையும்” என்று விளக்கமளித்துள்ளார்.
தற்போது பள்ளி, கல்லுாரிகளில் கேன்டீன்கள் திறக்கப்பட்டதாலும், சுப நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடப்பதாலும், காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.
வரத்து குறைவால் காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது என்கின்றனர் கோயம்பேட்டைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள்.
ஆன்லைன் சூதாட்ட தடை: இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!