மவுசு கூடிய மல்லிகைப்பூ: காரணம் தெரியுமா?
தமிழகத்தில் மல்லிகைப்பூ விலை அதிரடியாக உயர்ந்து கிலோ 5000 ரூபாய் வரை விற்பனையாகிறது.
கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே பூக்களின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது.
இந்தநிலையில் கடுமையான பனிப்பொழிவு, மழை பெய்து வருவதால் பூக்கள் உற்பத்தி குறைந்தது, சந்தைகளுக்கு வரத்து குறைந்துவிட்டது.
இதனால் விலையும் அதிகரித்துள்ளது. நாளை(டிசம்பர் 4) இம்மாதத்தின் முக்கிய முகூர்த்த நாள் என்பதால் மல்லிகைப்பூ கடுமையான விலையேறியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக நிலவும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக மல்லிகை பூ வரத்து அடியோடு சரிந்தது.
நாள்தோறும் ஆண்டிப்பட்டி மார்கெட்டிற்கு ஒரு டன் மல்லிகை பூ வந்த நிலையில் தற்போது 50 கிலோ கூட வரவில்லை.
இதனால் மல்லிகைப்பூ கிலோ 5000 ரூபாய் வரை விலை ஏலம் போனது. மல்லிகைப்பூ அதிகம் சாகுபடி செய்யப்படும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் கூட மல்லிகைப்பூ கிலோ 5,000 ரூபாய்க்கே விற்பனையானது.
கனகாம்பரம் கிலோ ரூ.1,500க்கும், முல்லைப்பூ ரூ. 1,400க்கு விற்பனை, ஜாதிப்பூ கிலோ ரூ.1,000க்கு விற்கப்படுகிறது.
திருக்கார்த்திகை மற்றும் முகூர்த்த தினங்களால் பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதும் வரத்து குறைந்து இருப்பதும் பூக்களின் விலை உயர்ந்து இருப்பதற்கு காரணம் என பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கலை.ரா
எடப்பாடி வழக்கு: அறப்போர் இயக்கம் மேல்முறையீடு!