நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 2 நாட்களுக்கு கனமழை!

தமிழகம்

மாண்டஸ் புயல் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து நிலவி வருவதால் தமிழகத்தில் இன்னும் 2 தினங்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நேற்று  (09.12.2022) தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ‘மாண்டஸ்’ புயல்,  நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து, இன்று காலை (10.12.2022) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவுகிறது.

இதன் காரணமாக, 10.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும். திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

12.12.2022 மற்றும் 13.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில  இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

10.12.2022: வட தமிழகம், புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50  முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

12.12.2022 மற்றும் 13.12.2022:   லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

14.12.2022: தென்கிழக்கு  மற்றும்  அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.

கலை.ரா

புயல் பாதிப்பு: முதலமைச்சர் ஆலோசனை!

காவல் நிலையத்தின் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *