திருவண்ணாமலையில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகள் இன்று (நவம்பர் 22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட் 3-வது அலகை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20 விவசாயிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி மதுசூதனன் 20 விவசாயிகளுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். ஜாமீன் வழங்கியதை அடுத்து 20 விவசாயிகளும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த விவசாயிகளுக்கு ஊர் மக்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து!