ஈஷா மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்காகத் தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பயண விவரங்கள் இதோ.
கோவை ஈஷாவில் மகா சிவராத்திரி நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 18) மாலை 6 மணியளவில் பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதற்கு சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் வருகை தருகிறார்.
2 நாள் பயணமாகத் தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் இன்று காலை 8.30 மணிக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து விமான நிலையம் புறப்படுகிறார். காலை 8.45 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை அடைந்து 8.55 மணிக்கு மதுரைக்கு தனி விமானம் மூலம் புறப்படுகிறார்.
சரியாகக் காலை 11.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தை அடைந்து 11.50 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு செல்கிறார். மதுரை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் இருந்து புறப்படும் குடியரசுத் தலைவர் மதியம் 12.15 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பிறகு மதியம் 1.45 மணிக்குக் கோவிலை விட்டுப் புறப்படுகிறார். 2 மணிக்கு விமான நிலையம் வந்தடைந்து 2.10 மணிக்குக் கோவைக்கு விமானத்தில் புறப்படுகிறார்.
பிற்பகல் 3.10 மணிக்குக் கோவை விமான நிலையத்தை அடைந்து 3.30 மணிக்கு சர்க்கியூட் ஹவுசிற்கு சென்று ஓய்வு எடுக்கவுள்ளார். ஓய்விற்குப் பிறகு மாலை 5.45 மணிக்கு காரில் ஈஷா மையத்திற்கு சென்று 6.00 மணிக்கு தியானலிங்க யோகி கோவிலில் தரிசனம் செய்கிறார்.
தொடர்ந்து இரவு 7.30 மணி வரை மாகசிவராத்திரி நிகழ்வில் பங்கேற்கிறார். பின்னர் இரவு 8.30 மணி வரை இரவு உணவு எடுத்துக் கொண்டு இரவு 9.15 மணிக்கு சர்க்கியூட் ஹவுசிற்கு சென்று ஓய்வு எடுக்கிறார்.
நாளை (பிப்ரவரி 19) காலை கோவை விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். அங்கு உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது.
பின்னர் வெலிங்டன் ராணுவ மையத்திலிருந்து கோவை விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து மதியம் 12.25 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார்.
5 அடுக்கு பாதுகாப்பு
தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் பயணிக்கும் வழியெங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெறும் கோவையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் என சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீஸ் அதிகாரிகள் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்க நேற்று (பிப்ரவரி 17) குடியரசுத் தலைவர் பயணிக்கும் வழிகள் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. கண்காணிப்பு கேமரா, டிரோன்கள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோனிஷா
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ராணுவ விமானத்தில் அனுமனின் உருவப்படம்!
ஏடிஎம் கொள்ளை : பதுங்கிய கொள்ளைக்கும்பல் தலைவன்… தட்டித் தூக்கிய தமிழக போலீசார்!
சாதிரீதியாக பிரச்சாரம் செய்கிறாரா எடப்பாடி? அதிமுக முன்னாள் அமைச்சர் விளக்கம்!