Preparation of National Flag in Coimbatore

சுதந்திர தினம்: தேசிய கொடி தயாரிப்பு பணிகள் தீவிரம்!

தமிழகம்

நாட்டின் 76-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்டு 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டின், பல்வேறு பகுதிகளிலும் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, கோவை டவுன்ஹாலில் தேசியக் கொடி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு கதர், வெல்வெட், மைக்ரோ துணிகளால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் கதர் துணிகளாலான தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.2,000 வரை விற்கப்படுகின்றன. மைக்ரோ துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் குறைந்தபட்சம் ரூ. 30 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

வெல்வெட் துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் அளவுகளுக்கு ஏற்றார்போல் ரூ.100 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து பேசியுள்ள தேசியக் கொடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்,

“சுதந்திர தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு, வழக்கமாக மூன்று மாதங்களுக்கு முன்பாகவே கொடிகள் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கிவிடுவோம். இந்த ஆண்டு ஜூன் இறுதி வாரத்தில் இருந்து கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இல்லாததால் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகளுக்கான ஆர்டர்கள் அதிக அளவில் வருகின்றன.

நாங்கள் மொத்தமாக துணிகளைக் கொள்முதல் செய்து இருகூர், அரசூர், மேட்டுப்பாளையம், குறிச்சி, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டெய்லர்களுக்கு அவற்றை பிரித்து வழங்குகிறோம். அவர்கள் அளவுக்கேற்ப அதைத் தைத்து எங்களிடம் திருப்பி தருவர்.

நாங்கள் அந்தக் கொடிகளில் 1 அங்குலம் முதல் 42 அங்குலம் வரை கொடியின் அளவுக்கேற்ப அசோக சக்கரத்தை, ஸ்கிரீன் பிரின்டிங் செய்து கொடிகளை தயாரிக்கிறோம்.

கொரானா சமயத்தில் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 25,000 கொடிகளுக்கு மேல் விற்பனை செய்யப்படவில்லை.

2021 முதல் சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு தலா ஒரு லட்சம் கொடிகளுக்கு மேல் ஆர்டர்கள் வருகின்றன. இதனால் டெய்லர்கள், சரக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் என 2,000 தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசியக் கொடி மட்டுமின்றி கட்சி கொடிகளின் ஆர்டர்களும் அதிக அளவில் வருவதால், கொடி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணிகள் கிடைக்கின்றன. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுதந்திர தினத்துக்கு தேசியக் கொடி மட்டுமின்றி, மூவர்ணத்தில் பேட்ஜ், தொப்பி, சால்வை, பலூன், குடை, மோதிரம் உள்ளிட்ட பொருள்களையும் விற்பனைக்கு வைத்துள்ளோம். இவற்றுக்கு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது” என்றனர்.

இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பேன்சி கடைகள், ஸ்டேஷனரி கடைகளில் கம்பத்தில் ஏற்றும் வகையில் பெரிய தேசியக் கொடிகள், சட்டையில் பொருத்தும் வகையில் சிறிய தேசியக்கொடிகள், சிறிய குச்சியுடன் கூடிய தேசியக் கொடிகளின் விற்பனையும் தீவிரமடைந்துள்ளது.

சென்ற ஆண்டு 75-வது சுதந்திர தினத்தன்று ‘அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி’ ஏற்றப்பட்டதால் தேசியக் கொடிகளின் விற்பனை அமோகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

திமுக அமைச்சர் பொன்முடி கைது?

அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *