சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் மெயில் புரளியானது என்று சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று (பிப்ரவரி 8) தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று காலை ஒரே ஐபி முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் மதியம் 1 மணியுடன் மாணவர்கள், ஆசிரியர்கள் வெளியேறினர். தலைநகர் சென்னையில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பொதுமக்கள் பதட்டமடைந்தனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 13 பள்ளிகளுக்கு இன்று காலை 10.30 மணி முதல் இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
பகல் 11 மணிவாக்கில் காவல்துறைக்கு தகவல் வந்தது. உடனடியாக இக்கல்வி நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல்துறை வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் அனுப்பப்பட்டனர். இந்த இ மெயில் ஒரு புரளி என்பது தெரியவந்தது.
மிகவும் கடினமான ஒரு தொழில்நுட்பத்தின் மூலமாக இந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இந்த மெயில் அனுப்பிய நபரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் பதட்டமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் சோதனை நடத்தினோம். எந்தவிதமான வெடிபொருட்களும் கண்டறியப்படவில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெருங்கும் தேர்தல்: தமிழகத்திற்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம்!
முடிவுக்கு வந்த 12 வருட பந்தம்… காதல் கணவரை பிரிந்த நடிகை இஷா தியோல்