“வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை” : தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ்!

Published On:

| By Kavi

Christmas celebration in Tamil Nadu

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று இயேசு பிறப்பு தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  அதன்படி இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Christmas celebration in Tamil Nadu

தமிழகத்தில் வேளாங்கண்ணி, தூத்துக்குடி, சென்னை – சாந்தோம், திருச்சி என மாநிலம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு கூட்டுப்பிரார்த்தனைகள் நடைபெற்றன.

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சென்னை சாந்தோமில் உள்ள தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளது. இயேசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில் அமைக்கப்பட்டிருந்தது.

இங்கு மழையினால் பாதிக்கப்பட்ட சென்னை, தூத்துக்குடி மக்களுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது. மக்களிடம் இருந்து பொருளுதவி பெற்று, அதனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக பாதிரியார்கள் கூறுகின்றனர்.

சாந்தோம் தேவாலயத்தில் ஒன்றரை மணி நேரத்துக்கு ஒருமுறை திருப்பலி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தேவாலயத்தில் குவிந்து வருகின்றனர்.

சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது. இங்கு நள்ளிரவில் நடைபெற்ற திருப்பலியில் 500க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்திலும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.

மயிலாப்பூர் லஸ் சர்ச், ராயப்பேட்டை காணிக்கை அன்னைஆலயம், எழும்பூர் திரு இருதயஆண்டவர் திருத்தலம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம் ஆகிய தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

கோவை மாவட்டம் ரத்தினபுரியில் உள்ள செயின்ட் பால் தேவாலயத்தில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி சார்பாக கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், மடாதிபதிகள், பாதிரியார்கள், முஸ்லீம் மத போதகர்கள் ஒன்றாக இணைந்து இனிப்புகளை ஊட்டி, வாழ்த்துகளை பரிமாறி கொண்டு சமத்துவ  விழாவாக கொண்டாடினர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திறந்தவெளி கலையரங்கில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. இயேசு கிறிஸ்து இவ்வுலகில் பிறந்த‌தாக அறிவிக்கப்பட்டு, அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை இயேசுவுக்கு பாதிரியார்கள் தீர்த்தம் தெளித்தனர்.

இவ்விழாவை முன்னிட்டு தேவாலயத்திற்கு வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள், இனிப்புகளை வழங்கி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

இங்கு உலகில் அமைதி நிலவவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட மக்களும், டிசம்பர் 16,17 ஆகிய தேதிகளில் பெய்த பெருமழையால் தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இப்படி பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்காகவும், கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

விமர்சனம்: ஆயிரம் பொற்காசுகள்!

‘இறைவன் மிகப்பெரியவன்’ தலைப்பு : அமீர் பதில்!

தமிழ் சினிமா 2023 : டாடா வெற்றியும் வாரிசு துணிவு வசூலும்!

Christmas celebration in Tamil Nadu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share