கிச்சன் கீர்த்தனா: இறால் பாப்ஸ்

தமிழகம்

மட்டன் பிரியாணி, சிக்கன்65, மீன் குழம்பு என்று சாப்பிட்டு சலித்துப்போனவர்கள், வருடக் கடைசியில் விதவிதமான ஹோட்டல்களுக்குச் சென்று வித்தியாசமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து ருசித்து மகிழ்வதுண்டு.

அந்த வரிசையில் ‘அப்படி என்ன இந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் உணவுகளில் இருக்கிறது. விலை மலையை விட அதிகமாக இருக்கிறதே!’ என்று வியந்து பார்ப்பவர்களும் ஏராளம். அப்படிப்பட்டவர்கள் வீட்டிலேயே செய்து ருசிக்க இந்த இறால் பாப்ஸ் உதவும்.

என்ன தேவை?

இறால் – 150கிராம்
முட்டை – ஒன்று
துருவிய சீஸ் – 2டீஸ்பூன்
பூண்டு – ஒரு பல்
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன்
ரெட் சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
மைதா மாவு – ஒரு கப்
வுடன் ஸ்கீவர்ஸ் (Wooden skewers) அல்லது ஐஸ்கிரீம் ஸ்டிக்ஸ் – தேவையான அளவு
பிரெட் கிரம்ப்ஸ் – ஒரு கப்
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

முட்டையை நன்றாக அடித்து வைக்கவும். மைதாமாவு மற்றும் பிரெட் கிரம்ப்ஸை தனித் தனிக் கப்களில் வைக்கவும். இறாலை நன்கு கழுவி சுத்தம்செய்து, அதனுடன் உரித்த பூண்டு, சோயாசாஸ், ரெட் சில்லிசாஸ், தக்காளிசாஸ், உப்பு, மிளகுத்தூள், துருவிய சீஸ் (மொசரல்ல/அமுல் சீஸ்), 2டேபிள்ஸ்பூன் அடித்த முட்டை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் (தண்ணீர் துளியும் சேர்க்க வேண்டாம்).

கலவையை நன்றாகப் பிசைந்து மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். ஒரு சிறிய ஸ்கீவர் அல்லது ஐஸ்கிரீம் குச்சியை முட்டையில் தோய்த்து, இந்த உருண்டைகளை அதில் செருகவும்.

பிறகு, மைதா மாவில் புரட்டி, பின்னர் முட்டையில் தோய்த்து, மீண்டும் பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி வைக்கவும். எல்லா உருண்டைகளையும் இப்படிச் செய்துகொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, செய்துவைத்த பாப்ஸ்களைப் பொரித்தெடுக்கவும். இறால் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் சிறிது நேரம் பொரித்தால் போதுமானது. சாஸுடன் பரிமாறவும்.

பிஸ்தா பாயசம்

இறால் மசால்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *