அசைவ உணவுகளில் பல வகைகள் இருந்தாலும்கூட இறாலுக்கென்று தனிச்சுவை உண்டு. சுவை மட்டுமல்ல… சத்துகளும் இறாலில் நிறைந்து காணப்படுகின்றன. இறாலில் அதிக அளவு புரதமும் வைட்டமின் டி சத்தும் அடங்கியுள்ளன.
கமகமக்கும் மணத்துடன் விளங்கும் இந்த இறால் துவையல், வழக்கமான சாத அளவைவிட இன்னும் கொஞ்சம் சாதத்தை சாப்பிட வைக்கும் தன்மைக் கொண்டது. தாய்லாந்தில் இந்த இறால் துவையலை விரும்பி சாப்பிடுவார்கள்.
என்ன தேவை?
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்)
பூண்டு – 4-5 பல் (நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய இஞ்சி – 2 டேபிள்ஸ்பூன்
இறால் – 250 கிராம் (சுத்தம் செய்து நரம்பு நீக்கவும்)
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5-6 (அல்லது ருசிக்கேற்ப)
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
இறாலுடன் மஞ்சள்தூள் சேர்த்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு பூண்டு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அது லேசான பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கி கொத்தமல்லி இலைகள், இறால் சேர்த்துக் கிளறி நன்கு வேகவைக்கவும். இந்தக் கலவையை ஆறவிட்டு, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். சாதத்துடன் பரிமாறவும்.
கிச்சன் கீர்த்தனா : கிரிஸ்பி இறால் வறுவல்