கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய நான்கு தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் பாலத்தொழு குளம் மாசடைவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் பெறப்பட்டதை அடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம் மூன்று அதிகாரிகளை கொண்ட சிறப்புக்குழு மூலம் ஆய்வு மேற்கொண்டது.
இதில் மூன்று சாய தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதை அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழுவினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த மூன்று சாய தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டு அந்த மூன்று தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதேபோல் சிப்காட்டில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலை கழிவுநீரை தொழிற்சாலை வளாகத்துக்கு வெளியே வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த ரசாயன தொழிற்சாலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, “சிப்காட் வளாகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தங்களின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் மற்றும் காற்று மாசு தடுப்பு சாதனங்களை முறையாகவும், தொடர்ச்சியாகவும் இயக்கி சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும். அனைத்து தொழிற்சாலைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தவறு இழைக்கும் தொழிற்சாலை மீது சட்டரீதியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ராகி ஸ்வீட் சேமியா