கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு சீஸ் சேவு

Published On:

| By Minnambalam Desk

தினமும் நொறுக்குத் தீனி கேட்டு நச்சரிக்காத பிள்ளைகளே இல்லை என்று சொல்லலாம். இதில் பெரியவர்களும் விதிவிலக்கு அல்ல. பயணங்களின்போது, அலுவலகம் முடிந்து வந்து டி.வி பார்க்கும்போது, சும்மா இருக்கும் சில நேரங்கள் எனச் சிலர் மிக்சர், சிப்ஸ், பீட்சா, பர்கர் என ஏதேனும் கொறித்தபடியே இருப்பார்கள். இப்படி அனைவரின் வயிற்றையும் நிரப்பித் தள்ளும் ‘ஸ்நாக்ஸ்’ என்று சொல்லப்படும் இந்த நொறுக்குத் தீனிகளை வீட்டிலேயே செய்து கொடுத்து வீட்டிலுள்ளவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யலாமே… அதற்கு இந்த உருளைக்கிழங்கு சீஸ் சேவு ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

பெரிய உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து, தோல் நீக்கி, நன்கு மசிக்கவும்)
கடலை மாவு – ஒன்றரை கப் Potato Cheese Sev Recipe
அரிசி மாவு – அரை கப்
கரம் மசாலாத்தூள், சீரகம் – தலா கால் டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
ஓமம், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன்
சீஸ் க்யூப் (சதுரத்துண்டு) – ஒன்று (துருவவும்)
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

எண்ணெயைத் தவிர மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து நன்கு அழுத்தி கட்டி இல்லாமல் காரா சேவு பதத்தில் மாவு பிசையவும் (தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்க்கலாம்). வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, சிறு கண் உள்ள காரா சேவு அச்சு அல்லது பெரிய கண் உள்ள ஓமப்பொடி அச்சில் மாவை நிரப்பி, எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

குறிப்பு: எண்ணெய் அதிகம் சூடாக இருக்கக் கூடாது. மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். சீஸில் உப்பு இருப்பதால், உப்பைப் பார்த்து சேர்க்கவும். விருப்பமான சீஸ் சேர்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share