பொற்சபை புகுந்தாரே அவ்வை நடராசனார்!

சிறப்புக் கட்டுரை தமிழகம்

ஸ்ரீராம் சர்மா

அன்றந்த அவ்வை…

‘தாயொடு அறுசுவை போம்; தந்தையொடு கல்விபோம்!’ எனத் தொடங்குமொரு வெண்பாவினைப் பாடி வைத்தாள்.

‘ஐயா, உம்மொடு எம் தமிழ் போமோ?’ என இலக்கிய உலகம் அலறும்படியாக விடை கொண்டு விட்டார் என் தந்தைக்கினிய அவ்வை நடராசனார்!

நெஞ்சகத்துள் ஊன்றி ஊன்றிப் பார்க்கிறேன் அந்தப் பெருந்தகையை…

அது, ஒரு தைப் பொங்கல் நாள். நடுப்பகல் நேரம். திருவல்லிக்கேணி பெசன்ட் ரோடு வீட்டில் என் தந்தையைக் காண தகவுடைய அவ்வை  நடராசனார் கனிகள் அடங்கிய சிறு சாக்குப் பையோடு வந்தார். அவரோடு மரியாதைக்குரிய சிலம்பொலி செல்லப்பனாரும் வருகை தந்தார்.

இருவரையும் கண்டு குஷியாகிப் போன என் தகப்பனார் ரேடியோவை அணைத்துவிட்டு அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டார். பகல் இளைக்க இளைக்க மூவரும் பசி காணாது பேசிக் கொண்டிருந்தார்கள்.  

பொங்கல் காலத்தில்தான் சென்னையில் கிரிக்கெட் மேட்ச் நடக்கும். அதன் வர்ணனை வானொலியில் வரும். கிரிக்கெட் ஸ்கோர் கேட்க விடாமல் தொணதொணத்துக் கொண்டிருக்கும் மூவரையும் சபித்தபடி சிறுவர்கள்  நாங்கள் வாசல் கடந்து போனோம் அந்த நாளில்…

பின்னொரு நாளில், புத்தி தெளிந்த இளமைக் காலத்தில், அதே அவ்வை பெருமகனாரின் மேடைப் பேச்சினைக் கேட்ட தருணம், கடவுளே, கடவுளே… இவரையா அன்று பழித்தோம் என படபடவென கன்னத்தில் போட்டுக் கொண்டேன்.

அம்மவோ, என்னவோர் நா அந்த நா !

அது பொழியும் வள்ளுவனை – கம்பனை, மேலுமெழுந்தார்த்துப் பொழியும் புறநானூற்றை, அகநானூற்றை!

ஆணிவேர் கொண்ட அந்த நா சிலம்பு – மணிமேகலை – தனிப்பாடல் திரட்டு என சங்கத்தமிழின் மொத்த சாற்றையும் தன்னியல்பாக விசிறியடிக்கும். அது, பரம்பரைத் தாக்கம்!

கேட்டு கொண்டே இருக்கலாம் அவ்வைப் பெருமகனார் தமிழ் பேசினால்…

மூக்குக்கும் மேலுதட்டுக்கும் இடையே அகண்ட இடைவெளி கொண்ட படர்ந்த முகம் எங்கள் அவ்வை நடராசனாருக்கான அடையாளம். பொதுவாக அதனை சிம்ம முகம் என்பார்கள். எனினும், அவர் அடுத்தவர் நடுங்க கர்ஜனை செய்து நாங்கள் கண்டதே இல்லை.

எதிரிக்கும் இதம் காட்டும் பண்புள்ளமும் நா நயமும் கொண்ட நல்லறிஞர் எங்கள் அவ்வை நடராசனார்! அவரது காலத்தில், அரசாங்கங்கள் அனைத்தும் அவரை பெரும் பதவிகளில் அமர வைத்துப் பலன் கண்டது. ஆட்சியாளர்கள் அனைவராலும் அவர் காதலிக்கப்பட்டார். காரணம், பண்பே வடிவான அவரது குணநலம். எளிமையாம் தன்மை.

கோட்டையில் பணி முடித்து வெளிப்படும் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அரசாங்க கார் இருந்தாலும், திடீரென பல்லவன் பேருந்தில் ஏறிக் கொள்வாராம். கேட்டால். “அட, அந்த கார் சில லட்சம் பெறுமானதுதானே?  பல லட்சம் பெறுமானதான இந்த பஸ்ஸில் போவோமே!” என்பாராம்.

பதவி சுகத்தை பெரிதாக எண்ணாத அவரைப் போன்றவரைக் காண்பதரிது.

அவ்வை நடராசனாரின் தன்னம்பிக்கை அலாதியானது.

Porchabai pugunthare Avvai Natarasanaar Sriram Sharma

ஒருமுறை, பட்டிமன்றக் கோமகன் சாலமன் பாப்பையா அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர் எண்பது கடந்த வயதிலும் எகிறி அடித்தார்…

“கேட்டீர்களா, சாலமன் பாப்பையா என் மாணவன் என்கிறார். அது முழுப் பொய். காரணம், நான் வகுப்பெடுத்த காலத்தில் எந்த புத்திசாலி மாணவனும் அங்கிருந்ததில்லை. அதனால்தான் நான்கு ஆண்டுகளோடு அந்தப் பணியை முடித்துக்கொண்டேன்..” என தன்னைத் தாழ்த்திக் கொண்டு விழா நாயகரை உயர்த்தியபடி அரங்கத்தை கலகலக்கச் செய்தார் அந்தப் பெருமகன்!

“இராமனுக்கு உடன் பிறந்தது ஒரு மூவர். அவன் கானகம் போந்ததால் வாய்த்தது இரு மூவர்…“ என இராம காதையின் அரசியல் சூட்சுமத்தை இலக்கிய நயத்தோடு நுணுக்கமாய் எடுத்துரைத்த பேரறிவாளர் எம் அவ்வை  நடராசனார்.

முதல் தலைமுறையில் படித்து வருபவர்களை முடிமேல் சுமந்து உயர்த்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும் என முத்தமிழறிஞர் கலைஞர் என்னிடத்தில் வலியுறுத்திச் சொன்னதை என் வாழ்நாள் தோறும் கடைப்பிடிக்க கடமைப்பட்டவன் நான் என நெக்குருகியபடிச் சொன்னவர் அதன் வழியே நின்றும் காட்டினார்!

ஒருமுறை, அரசாங்கப் பணியில் அவர் இருந்தபோது வெளிநாட்டிலிருந்து வந்த அறிஞர்கள் சிலரை காரில் ஏற்றிக் கொண்டு கோட்டைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

Porchabai pugunthare Avvai Natarasanaar Sriram Sharma

அண்ணாசாலையைக் கடக்கும்போது, “பார்த்தீர்களா, இதுதான் இந்த நாட்டை ஆளும் கட்சியின் தலைமையகம். அதற்குப் பெயர் ‘அறிவாலயம்’. சொல்லுங்கள், உலகத்தில் எந்த நாட்டிலாவது ஒரு கட்சியின் அலுவலகம் ‘அறிவாலயம்’ என்ற பெயரை கொண்டுள்ளதா? ஆம், அறிவுதான் இந்த மண்ணின் தேடல். அதுதான் எங்கள் தாகம்…” என அவ்வை நடராசனார் சொல்லச் சொல்ல அயலர் திகைத்து வணங்கி வாழ்த்தினராம்.

ஐயகோ, அந்த அறிவு ஜோதி அணைந்தேவிட்டது. இலக்கிய உலகின் ஞானப் பெட்டகம் ஒன்று தமிழ் மண்ணில் இருந்து அநியாயமாகப் பிடுங்கப்பட்டு விட்டது. ஞாயிறு கடந்த அந்த திங்கள் நாளில் எங்கள் திராவிடச் சூரியன் ஒன்று மேற்கு திசைக்குள் நிரந்தரமாக பாய்ந்தே விட்டது.

தாயினும் பரிந்து பேசும் அந்தப் பெருந்தகையை – பேரறிவாளரை – இலக்கியக் கடலை – பண்பே உருவான என் தகப்பனையொத்த அந்தத் திருவுருவை….

Porchabai pugunthare Avvai Natarasanaar Sriram Sharma

பாழுங் கண்ணாடிப் பேழைக்குள் காணுகையில் நெஞ்சடைத்துப் போனது!

அருகே, அவரை அப்படியே அச்சடித்தாற்போல குழைந்து நின்றிருந்தார் அண்ணன் அருள். அவர் முகம் நோக்க அஞ்சியவன் அவரது கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டு கண்ணாடிக்குள் எட்டி நோக்கினேன்.

ஆங்கே, அந்தப் பேரறிவு சிவமாகிக் கனிந்து உறைந்திருக்கக் கண்டேன்.

‘சிவோஹம், சிவோஹம்’ என பொது வெளியில் முதன் முறையாக வாய் விட்டு மெல்லக் கதறினேன்.

கூற்றே, தொல்விதியே, கோச்சடைப் பெருந்தேவே, உன் வேட்டை மனம் அடங்கலையோ?  திராவிடத் திருமண்ணின் இலக்கிய செல்வங்களை இன்னமும் திருடுவையோ? அது, நீதமோ, பிடிவாதமோ எனவெல்லாம் மனதுக்குள் புலம்பியபடி – தமிழ் இலக்கியப் பேரறிவை தன்னுள் அடக்கி வைத்திருந்த அந்தப் பேழையை, கரம் கூப்பி சுற்றி வந்து சிரம் தாழ்த்தி திரும்பினேன்.

அன்றொரு நாளில் ஆதி சங்கரர் – வேள்வி மதங்களை மறுத்ததொரு சித்த நிலையில் நின்று – சமஸ்கிருத மொழியில் இப்படியாகப் பாடினார்…

ந ச ப்ராண சங்க்யோ ; ந வை பஞ்சவாயு ;

ந வாக் சப்த தாதூர் ; ந வா பஞ்ச கோச ;

ந வாக் பாணி பாதம் ; ந சோப ஸ்தபாயு ;

சிதானந்த ரூபம், சிவோஹம்! சிவோஹம்!!

அதன் பொருள்:

நீ காணும் நான் ஆகப்பட்டவன் வேறானவன். நாளெல்லாம் ஓயாது உள் இழுத்து விடும் மூச்சுக் காற்றுக்கும் – உதிரம், எலும்பு, சதை, சுக்கிலம் உள்ளிட்ட ஏழு தாதுக்களுக்கும் – அன்னம், மனம், ஆனந்தம், விஞ்ஞானம் போன்ற எந்த இழவுக்கும் இனி நான் அடிமைப்பட்டவன் அல்லன். கேள், நீ காணும் இந்த கைகளும், கால்களும் கூட நானல்ல. நான் சிவரூபமாகி விட்டவன்! ஆம், எல்லாம் சிவமயம்! எல்லாம் சிவமயம்!

அவ்வை நடராசனார், ஆனந்த பொற்சபைக்குள் புகுந்தே விட்டார்!

ஓம் சிவோஹம்!!

கட்டுரையாளர் குறிப்பு

Porchabai pugunthare Avvai Natarasanaar Sriram Sharma

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.

300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

மறுதலிக்கப்படுமாம் தற்கொலைகள் ! 

மின் இணைப்புடன் ஆதார் எண்: செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “பொற்சபை புகுந்தாரே அவ்வை நடராசனார்!

  1. அவ்வை நடராசனார் பற்றி பெரிதாக தெரியாது..ஆனால் கட்டுரையாளர் என்னவோ கலங்க செய்து விட்டார்.
    ஓம்
    சிவோஹம் சிவோஹம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *