தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைமை அலுவலகத்துக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று(அக்டோபர் 1) சீல் வைத்தனர்.
இதேபோல தமிழகம் முழுதும் மாவட்ட அலுவலகங்களுக்கும் இன்று அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பி.எஃப்.ஐ அலுவலகங்கள் மற்றும் அமைப்பிற்கு தொடர்புடைய முக்கிய நிர்வாகிகள் வீட்டில் அதிரடியாக என்.ஐ.ஏ மற்றும் மத்திய அமலாக்கத்துறை சோதனை நடத்தின.
இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பி.எஃப்.ஐ அமைப்பு, தீவிரவாத இயக்கத்திற்கு உதவுவதாகவும், இந்த அமைப்பிற்கு ஆட்களைச் சேர்ப்பதற்குப் பலரை மூளைச் சலவை செய்வதாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.
சோதனையைத் தொடர்ந்து பி.எப்.ஐ அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழகத்திலும் கோவை, ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் நடைபெற்றன.
இந்தநிலையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
காவல்துறை அதிகாரிகள், கட்டிடத்தின் உரிமையாளர் ஆகியோர் முன்னிலையில் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன் சீல் வைத்தார்.
பிறகு அதற்கான நோட்டீசும் ஒட்டப்பட்டது. இதையொட்டி புரசைவாக்கத்தில் ஒரு துணை ஆணையர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.
கலை.ரா
அக்டோபர் 11 இல் மனித சங்கிலி: 9 கட்சிகள் கூட்டறிக்கை!
6 மாவட்டங்களில் நாளை கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!