ஆசை நாயகிக்கு கொடுக்க 550 சவரனை திருடிய நபர் : சொந்த வீட்டிலேயே கைவரிசை – சிக்கியது எப்படி?

Published On:

| By Kalai

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே, ஆசை நாயகிக்கு கொடுக்க சொந்த வீட்டிலேயே 550 சவரனை திருடிய நபரை காதலியோடு சேர்த்து கைது செய்திருக்கிறது போலீஸ்.

பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர்(40). இவரது தம்பி ராஜேஸ்(37). இருவரும் திருமணமானவர்கள். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இருவரும் தாயார் தமிழ்ச்செல்வியுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கணவரின் வீட்டுக்கு திரும்பி வந்த அவர், பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகை பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்திருக்கிறார்.

அப்போது அது மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதேபோன்று ராஜேஸின் மனைவி  தமிழ்ச்செல்வியின் 200 சவரன் நகையும், 5 தங்க கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் பூந்தமல்லி போலீசில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அண்ணன் சேகர் 550 சவரன் நகையை திருடி அவரது ஆசை நாயகிக்கு  கொடுத்திருப்பது தெரியவந்தது. 

”சேகரின் மனைவி பிரிந்து சென்ற பிறகு, சேகருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வதோடு வெளியூர் வரை சென்று சுற்றியுள்ளனர். 

அப்போது சேகர் வீட்டிலிருந்த 550 சவரன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்று ஸ்வாதியிடம் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணுக்கு 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.

அதேபோல்  ஸ்வாதிக்கு காரும் வாங்கிக் கொடுத்ததாக தெரிகிறது.  இது தொடர்பாக சேகர் மற்றும் ஸ்வாதியை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். நகைகளை எங்கே வைத்துள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது” என்கின்றனர் காவல்துறை தரப்பில்.

கலை.ரா

கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைதான தேர்வர்கள்: பெற்றோர்கள் குமுறல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment