“இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் ஒரு வரலாறு உருவாகும் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்” என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. மேலும் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை மூலம் ஒரே நாடு ஒரே மொழி என்று இந்தியை மக்களிடம் திணிக்கப் பார்கிறது.
இந்தி திணிப்பையும் தேசிய கல்விக் கொள்கையும் எதிர்த்து தமிழகம் மட்டுமல்லாது தற்போது கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக அக்டோபர் 12ஆம் தேதி மேற்கு வங்கத்தில் இந்தி திணிப்பிற்கு எதிராகப் போராடியவர்கள் தமிழகத்தின் தலைவர்களான பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரது புகைப்படங்களைக் கையில் ஏந்திக் கொண்டு போராட்டம் நடத்தியது பரபரப்பாகப் பேசப்பட்டது.
தமிழகத்திலும் இந்தி திணிப்பிற்கு எதிராக திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி தலைமையில் நாளை (அக்டோபர் 15) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 14) சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது இந்தி திணிப்பு போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த பொன்முடி, “இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டம் நடைபெறுவது என்பது புதிதல்ல.
திராவிட இயக்கம் தோன்றியதிலிருந்து, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து துவங்கப்பட்ட போராட்டம்.

நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி மொழி திணிக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறோம்.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டு நாட்களுக்கு முன் தமிழகம் வந்திருந்த மத்திய இணை அமைச்சர் விஸ்வேஸ்வர் துடு, ’கலை அறிவியல் கல்லூரியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்குக் கூட இந்திய அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
ஆகையால், நுழைவுத் தேர்வுகள் அகில இந்திய அளவில் நடத்தக்கூடாது என்பதையும் தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதையும் எதிர்த்துத்தான் நாளை தமிழகத்தில் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவர் அணிச் செயலாளர் எழில் ஆகிய இருவர் தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு வரலாறு உருவாகும் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
மோனிஷா
ஹிஜாப் வழக்கு: இரு வேறு தீர்ப்பு!- அடுத்து என்ன?
தமிழக அரசு வைத்த முக்கிய கோரிக்கை: நீட் வழக்கு ஒத்திவைப்பு!